அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய போதிலும் அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து வெளிப்படையான அதிருப்தியை, தாங்கள் இந்தியாவால் சிறப்பாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை. பிரதமர் மோடியை நான் மிகவும் விரும்புகிறேன்”என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியவுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்வதாகவும் அது நவம்பரில் அதிபர் தேர்தலுக்கு முன்பு செய்யப்படுமா என்பது அவருக்கு தெரியாது என்றும் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24 -25 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அதற்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப், “"நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், பின்னர், நான் உண்மையில் பெரிய விஷயங்களைப் பெறலாம். நாங்கள் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்கிறோம். அது அதிபர் தேர்தலுக்கு முன்னர் செய்யப்படுமா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இந்தியாவுடன் எங்களுடைய மிகப் பெரிய ஒப்பந்தம் இருக்கும்” என்று கூறினார்.
இதன் மூலம் இந்த முறை ஒரு பெரிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் பட்டியலில் இருக்காது என்பதை அவரது அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், இந்த பயணத்தின் போது அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வர்த்தக தொகுப்பில் கையெழுத்திடலாம் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய போதிலும் அமெரிக்கா - இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து வெளிப்படையான அதிருப்தியை தெரிவித்து, தாங்கள் இந்தியாவால் சிறப்பாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை. பிரதமர் மோடியை நான் மிகவும் விரும்புகிறேன்”என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் கூறுகையில், “விமான நிலையத்திற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கும் இடையே ஏழு மில்லியன் மக்கள் இருப்பார்கள் என்று மோடி என்னிடம் கூறினார். இந்த ஸ்டேடியம் ஒரு வகையான கட்டுமானம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கமாக இருக்கும். நீங்கள் அனைவரும் இதை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய நபரான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், டிரம்புடன் இந்தியாவுக்கு வரவில்லை. இருப்பினும், அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முற்றிலும் நிராகரிக்கவில்லை.
இதனிடையே, 2019-ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சரக்கு மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்த அமெரிக்க-இந்தியா வர்த்தகம் (110.9 பில்லியன் டாலர்) 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறையே நான்கு சதவீதம் மற்றும் ஐந்து சதவீதமாக அதிகரித்துள்ளது.
2019 முதல் மூன்று காலாண்டுகளில் அமெரிக்கா 45.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 4 சதவீதம் அதிகரித்துள்ளது; அமெரிக்கா இந்தியாவில் இருந்து 65.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தது. இது முந்தைய ஆண்டின் 62.5 பில்லியன் டாலரை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தெரிவித்துள்ளது.
தற்போதைய 7.5 சதவீத சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் நீடித்தால், 2025 ஆம் ஆண்டில் மொத்த இருதரப்பு வர்த்தகம் 238 பில்லியன் டாலர்களை எட்டும் என்று யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் கணித்துள்ளது; இருப்பினும், அதிக வளர்ச்சி விகிதங்கள் இருதரப்பு வர்த்தகத்தை 283 பில்லியன் டாலர்கள் மற்றும் 327 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் ஏற்படுத்தக்கூடும்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா இந்தியாவுக்கான சிறந்த வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து சீனாவும் உள்ளது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஏறக்குறைய 62 சதவீத பொருட்களிலும், சேவைகளில் 38 சதவீதத்திலும் இருக்கும்போது, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் பொருட்களால் ஆதிக்கம் செலுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.