அமெரிக்க-ரஷ்ய அதிபர்கள் ஜூலை 16-ல் சந்திப்பு: ‘ராணுவச் செலவை குறைப்பது குறித்து பேசுவோம்’ என்கிறார் ட்ரெம்ப்

சிரியா, உக்ரைன், தேர்தல்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியப் பேச்சுவார்த்தை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை வருகின்ற ஜூலை 16ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் சந்திக்க இருக்கின்றார். பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்க்கியில் நடைபெறப் போகும் இந்த சந்திப்பு இரு நாட்டின் நட்பினை பலப்படுத்தும் விசயங்கள் பற்றி பேச இருப்பதாக தகவல்.

ட்ரெம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற இந்த இரண்டு வருடங்களில், இரு நாட்டுத் தலைவர்களும் இரண்டு முறை மட்டுமே வெவ்வேறு பொது நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கின்றார்கள்.  இருநாடுகளின் உறவு முறை குறித்து அதிகாரப்பூர்வமாக இருவரும் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ட்ரெம்ப், பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார். இந்த சந்திப்பு எதைப் பற்றியதாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ட்ரெம்ப் “நாங்கள் இருநாட்டின் உறவு முறை குறித்து பேசுவோம். சிரியா பற்றியும், உக்ரைன் பற்றியும், உலக நாடுகளின் அமைதிப் பற்றியும், பாதுகாப்பு குறித்தும் அதிகம் பேசுவோம்” என்றார். மேலும், ஆயுதங்களுக்காக செலவு செய்யப்படும் மில்லியன் கணக்கான டாலர்களை எப்படி குறைப்பது என்பது பற்றியும் பேசுவோம்” என்றும் அவர் அறிவித்தார்.

இந்த வாரம், ரஷ்யா சென்று திரும்பிய அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டோன், டொனால்ட் ட்ரெம்பினை சந்தித்து பேசிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நேட்டோ பற்றி கேள்வி எழுப்பிய போது, “நேட்டோ நல்ல விஷயம் தான். அது எப்படி செயல்படுகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜெர்மனி, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் அதற்கான பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார். ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவுடனான நல்லுறவினை விரும்புவதாகவே ட்ரெம்ப் கூறியிருக்கின்றார். ஆனால் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ட்ரெம்ப் அதிபராவதை ரஷ்யா விரும்பவில்லை என்ற செய்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான், நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரெம்பிற்கு இடையே நடக்க இருந்த 2+2 பேச்சு வார்த்தை, தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என அமெரிக்காவின் செக்கரட்டரி மைக்கேல் போம்பியோ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close