அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் சீன உளவு பலூனை அமெரிக்க ராணுவமான பென்டகன் நேற்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வானில் பலூன் ஒன்று கடந்த 5 நாட்களாக சுற்றி வந்ததை அதிகாரிகள் கண்டுள்ளனர். அது சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அந்த பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஐடாஹோ பகுதியில் இருந்து கரோலினாஸ் வரை தென்கிழக்கு திசையில் கடந்த 5 நாட்களாக பலூன் சுற்றி வந்துள்ளது. சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பலூன் அணு ஆயுத தளத்தின் மேலே பறந்ததால் சுட்டு வீழ்த்த முடியவில்லை.
மேலும் அங்கு செய்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்று கருதி அந்த முயற்சி கைவிடப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பலூனை சுட்டு வீழ்த்த மாற்று வழிகளை கண்டு வந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், பலூன் சனிக்கிழமை மதியம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் தக்க நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. லாங்லி விமானப்படை தளத்தில் இருந்து எஃப்-22 போர் விமானத்தில் இருந்து ஒரே ஒரு ஏவுகணை மூலம் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பலூனின் உதிரி பாகங்களை கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உதிரி பாகங்களை கொண்டு ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கா பலூனை வீழ்த்தியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கடுமையான அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த பலூன் சிவிலியன் விமானம். தவறுதலாக அமெரிக்கா எல்லைக்குள் வந்துள்ளது. இது முற்றிலும் தற்செயலானது என சீனா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சீனா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்குப் பிறகு சீன பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/