துருக்கியில் நிலநடுக்கங்களால் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்து பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், துருக்கியில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்காக டிஜிசிஏ-அங்கீகரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை வழங்குமாறு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் NDRF கோரியுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கருடா ஏரோஸ்பேஸ், இடிபாடுகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு சிக்கியிருக்கலாம் என்பதைக் கண்டறிய, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்களின் ட்ரோனை அனுப்ப முடிவு செய்துள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ்சின் ட்ரோனை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் இடத்தைக் கண்டறியும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருந்துகள், பொருட்கள் மற்றும் உணவை எடுத்துச் செல்ல உதவும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கருடா ஏரோஸ்பேஸ் உத்தரகண்டில் சமோலி பனிப்பாறை வெடித்ததில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக ட்ரோன்களை அனுப்பியது. மேலும், ராஜஸ்தானில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதன் மூலம் பெரும் பங்கு வகித்தது.
கருடா ஏரோஸ்பேஸ் ஸ்விக்கியுடன் சேர்ந்து, கொரோனா பெருந்தொற்றின் போது மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அவசரகால ட்ரோன்களைப் பயன்படுத்தியது.
84 நகரங்களில் 400 ட்ரோன்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட விமானிகள் பொருத்தப்பட்ட கருடா ஏரோஸ்பேஸ் பல்வேறு அவசரநிலைகளுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் நடந்த குளோபல் ட்ரோன் எக்ஸ்போவில் ட்ரோனி என்ற கேமரா ட்ரோனை வெளியிட்து, நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஆனார்.