டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளைக் குறைக்கும் DOGE துறைக்கும் தலைமை வகித்தார். ஆனால், BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்த கட்சியின் முக்கிய நோக்கம் என்று மஸ்க் தனது எக்ஸ்தளத்தில் தெரிவித்தார். “வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தை திரும்ப வழங்குவதற்காக ‘தி அமெரிக்க பார்ட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது,” என்று மஸ்க் பதிவிட்டார். அமெரிக்காவிற்கு புதிய அரசியல் கட்சி தேவையா?என்பது குறித்து தனது சமூக ஊடக தளமான X-ல் அவர் நடத்திய கருத்துக் கணிப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
"2க்கு 1 என்ற விகிதத்தில், உங்களுக்கு புதிய அரசியல் கட்சி தேவை என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அது உங்களுக்குக் கிடைக்கும்!" என்று மஸ்க் தனது எக்ஸ்பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சமீபத்தில், ட்ரம்ப் நிறைவேற்றிய வரி குறைப்பு மற்றும் செலவு மசோதா தொடர்பாக மஸ்க் பகிரங்கமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதாக அவர் அச்சுறுத்தியிருந்தார். 2 கட்சிகளையும் சாடிப் பேசிய மஸ்க், "நமது நாட்டை வீணான செலவுகள் மற்றும் ஊழலால் திவாலாக்குவதில், நாம் ஒரு ஒற்றைக் கட்சி அமைப்பில் வாழ்கிறோம், ஜனநாயகம் அல்ல" என்று கூறினார்.
டிரம்ப்புடன் ஏற்பட்ட மோதலின் போதுதான், அமெரிக்காவிற்கு புதிய கட்சி தேவையா என்று X-ல் மஸ்க் கருத்துக் கணிப்பை நடத்தினார். "ஸ்பார்டன் அசைக்க முடியாத தன்மையின் கட்டுக்கதையை எபமினோண்டாஸ் லியூக்ட்ராவில் தகர்த்ததைப் போன்ற ஒரு மாறுபாட்டைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் ஒரு துல்லியமான இடத்தில் அதிக செறிவூட்டப்பட்ட சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் ஒற்றைக் கட்சி அமைப்பை நாம் உடைக்கப் போகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
முன்னதாக, 2024-ல் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மஸ்க் சுமார் $280 மில்லியன் நிதி வழங்கியிருந்தார். மேலும், மத்திய அரசுக்கான செலவினங்களை குறைப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராகவும் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், இந்த மசோதா குறித்த கருத்து வேறுபாடுகளால் இருவரும் மோதலில் ஈடுபட்டனர்
இந்த வார தொடக்கத்தில், மஸ்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பெறும் மத்திய அரசின் மானியங்களை நிறுத்திவிடுவேன் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மஸ்கின் இந்த புதிய கட்சி அமெரிக்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது கட்சிக்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.