குழந்தையை பிரசவித்த 30 நிமிடங்களில் தேர்வெழுதியிருக்கிறார் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர் அல்மாஸ் டெரீஸ். கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்திற்கு முன்பே தனது உயர்நிலைப் பள்ளி தேர்வை முடித்துவிட நினைத்தார். ஆனால் ரம்ஜான் பண்டிகையால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன.
திங்கட்கிழமை தேர்வுகள் நடக்கவிருந்த சமயத்தில் அதற்கு முன்பாக அல்மாஸுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பிரசவம் முடிந்த கையோடு அடுத்த 30 நிமிடத்தில் தேர்வெழுதியிருக்கிறார்.
ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் ஆகிய தேர்வுகளை மருத்துவமனையில் அமர்ந்து எழுதிய அல்மாஸ், அடுத்து நடக்கும் தேர்வுகளை தேர்வு மையத்துக்கு சென்று எழுதவிருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் போது படிப்பது எனக்கு பிரச்னையாக இருக்கவில்லை. இதைக் காரணமாக வைத்து நான் தேர்ச்சியடைவதை அடுத்தாண்டு வரை தள்ளிப்போட விரும்பவில்லை என பதிலளிக்கிறார் அல்மாஸ்.
மருத்துவமனையில் தன் மனைவி தேர்வெழுதுவதற்காக, அந்த பள்ளியை இணங்க வைத்திருக்கிறார் அல்மாஸின் கணவர் தடீஸ் துலு.
பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதும், பின்னர் இடைவெளி விட்டு முடிப்பதும் எத்தியோப்பியாவில் பரவலாகக் காணப்படும் ஒன்று.
இதற்கிடையே தனது மகன் ஆரோக்கியமாக இருக்கிறான் என மகிழ்ச்சியடைகிறார் அல்மாஸ்.