Facebook user account hack: பயனாளிகளின் 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு துணை தலைவர் கய் ரோசென் கூறுகையில், "பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். இதனால் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுபோலவே, 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்.
இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பம்சமான "View As" எனும் வசதி மூலம் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.
இந்த வசதியில், பேஸ்புக் கணக்கு பாஸ்வேர்டு பற்றிய தகவல்களை கொண்டதாக உள்ளது. இதனால் இதனை மற்றவர்கள் பார்க்க வாய்ப்பிருந்துள்ளது. இதன் மூலம் ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் முடியும். தற்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து வருகிறோம். ஆனால், இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை மாற்றத் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.