பத்திரிகையாளர் இ. ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரது நற்பெயருக்கு அவதூறு செய்யும் வகையில் செயல்பட்டதற்காகவும், டிரம்புக்கு 5 மில்லியன் டாலர் அபராதம் விதித்து ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புக்கு சட்டரீதியான பின்னடைவு என தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள இரண்டாவது அமெரிக்க சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, புதிய விசாரணைக்கான டிரம்பின் மேல்முறையீட்டை நிராகரித்தனர். டிரம்பால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளான மற்ற பெண்களின் சாட்சியங்கள் மற்றும் பெண்கள் குறித்து டிரம்ப் தவறாக பேசுவது தொடர்பான டேப்பும் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், 1990-களில், நியூயார்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தை வன்கொடுமை என நீதிபதிகள் தெரிவிக்கவில்லை. டிரம்புக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 2.02 மில்லியன் டாலர் பாலியல் துன்புறுத்தலுக்காகவும், 2.98 மில்லிடன் டாலர் அவதூறான சமூக வலைதள பதிவிற்காக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் கரோலின் குற்றச்சாட்டுகளை வெறும் வதந்தி என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெஸ்ஸிகா லீட்ஸ் மற்றும் நடாஷா ஸ்டோய்னாஃப் என்ற இரு பெண்களின் சாட்சியங்கள் முக்கியமானதாக கருதப்பட்டன.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக கரோலின் வழக்கறிஞர் ராபர்ட்டா கப்லான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், கரோல் குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
டிரம்ப் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னரும் இது தொடர்பான வழக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.