அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், அண்மையில் தென் ஆப்பிரிக்கா சென்றுவிட்டு, அமெரிக்கா திரும்பியுள்ளார்.
Advertisment
இதுதொடர்பாக மருத்துவர் அந்தோணி ஃபாசி கூறுகையில், "தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் நவம்பர் 22 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்துள்ளன.
இதையடுத்து, சோதனை செய்ததில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர், பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்தது" என தெரிவித்தார்.
ஒமிக்ரான் தொற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், அதனை தடுத்திட தடுப்பூசியை சீரமைக்கும் பணியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங் , இஸ்ரேல் என 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரானில் பரவியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பில் 75 விழுக்காடு ஒமிக்ரான் தொற்று ஆகும்.
இதுகுறித்து வைராலஜிஸ்ட் ஆண்டி பெகோஸ் கூறுகையில், " அடுத்த வாரம் அல்லது அதற்கு பின்னர் இந்த ஒரு ஒமிக்ரான் பாதிப்பால் சமூக பரவலை காணவாய்ப்புள்ளது. இது கவனிக்க வேண்டிய விஷயம். இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எவ்வளவு எளிதாக பரவுகிறது, அதனால் ஏற்படும் பாதிப்பு, தற்போதுள்ள தடுப்பூசிகள் அதனை எவ்வாறு தடுக்கும் என்பதை அறிய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும்" என்றார்.
பைடன் அரசு, முழுமையாக தடுப்பூசி போட்டவர்களை பூஸ்டர் ஷாட்களைப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கர்களில் 60 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பூஸ்டர்களை எடுத்துக் கொண்டனர் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil