தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக இலங்கையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி காலூன்றி இருக்கிறது.
இலங்கையின் திரிகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை முதல் தொடங்கியது. முதலாவதாக சம்பூர் பத்ரகாளியம்மன் கோயில் மாடு களத்தில் இறக்கிவிடப்பட்டது. இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 300க்கும் மேற்கட்ட காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளன.
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில், இப்போட்டி நடைபெற்று வருகிறது. இவரது பூர்வீகம், தமிழகத்தின் சிவங்கை மாவட்டம் என்பதால், தமிழகத்தின் கலாசார பெருமையாக விளங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை இலங்கையிலும் கொண்டு வருவதற்காக அவர் பெரும் முயற்சிகளை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் செந்தில் தொண்டமான் பேசுகையில், "தமிழக மக்களின் அனைத்து பாரம்பரிய போட்டிகளையும், பொங்கல் பண்டிகையையொட்டி, இங்கு நாங்கள் நடத்துவதில் பெருமை கொள்கிறோம் என்றும், ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், ரேக்லா பந்தயம், சிலம்பம் போட்டி, படகுப் போட்டி, கடற்கரை கபடி என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“