கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ எனும் பெண், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தனது ஓவியங்களை விற்று அதன் மூலம் தன் வாழ்நாளை கடத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், பேஸ்புக்கில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில் பேசிய பெண்மணி ஒருவர், "என் பெயர் ஜெயஸ்ரீ. நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். ஹெச்சிஎல் உட்பட பல சாப்ட்வேர் நிறுவனங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரிக்கையில், ஜெயஸ்ரீ எனும் அந்த பெண் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இன்டர்வியூவிற்காக அமெரிக்கா சென்றவர், அங்கே தனது உடமைகளை தொலைக்க, வேறு வழியின்றி ஓவியங்கள் வரைந்து அதை விற்று வரும் பணத்தில் ஒவ்வொரு நாட்களையும் கடத்தி இருக்கிறார். அவர் சாலைகளில் அமர்ந்து ஓவியங்களை விற்பதை பார்த்த சில இந்தியர்கள் தான் அந்த வீடியோவோ சமூக தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவரை மீட்டவர்கள் கூறுகையில், "சாலையில் படங்களை விற்றுக் கொண்டிருந்த அவர், இந்திய சாயலில் இருந்ததால், சந்தேகப்பட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போதுதான் அவர் பாஸ்போர்ட், ஐடி உள்ளிட்டவற்றை தொலைத்ததைப் பற்றி எங்களிடம் கூறினார். மேலும், ஜெயஸ்ரீ 2014ம் ஆண்டிற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஜெயஸ்ரீயின் உறவினர்கள் கூறுகையில், "அவர் இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்தது எங்களுக்கு தெரியாது. நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம். கடைசியாக, 2017 செப்டம்பர் மாதம் ஜெயஸ்ரீயிடம் பேசினோம். அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம்" என்றனர்.
ஜெயஸ்ரீ 1991ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின், டிசிஎஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட பல சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோவிலும் அவர் இதற்கு முன் தங்கி இருக்கிறார். அமெரிக்காவின் சீட்டில் நகரில் அவருக்கு சமீபத்தில் வேலைக் கிடைத்திருக்கிறது. இதற்காகவே அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், இண்டர்வியூ நடைபெறாமல் போக, அதன் பின் தனது உடமைகளையும் அவர் இழந்ததால், ஓவியங்களை விற்று வாழ்ந்து வந்திருக்கிறார்.