மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் நே அந்த நாட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர்:
நஜீப் ரசாக், மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர் அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரின்பேரில் ரசாக்கிற்குச் சொந்தமான கட்டடங்களில் மலேசிய ஊழல் தடுப்புப் படையினர் நடத்திய சோதனைகளின்போது 273 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 1,848 கோடி) நகைகள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நஜீப் ரசாக் நேற்று( 19.9.18) கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பேரிசன் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த பிரதமர் நஜீப் ரசாக் படுதோல்வியை சந்தித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
ரஜினியின் நண்பர்:
2016ஆம் ஆண்டு கபாலி திரைப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, மலேசியாவின் பிரதமராக இருந்த நஜீப் ரசாக்கை சந்திக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு அதாவது 2017ல் சென்னை வந்திருந்த நஜீப் ரசாக் ரஜினிகாந்தை அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்து நட்பு பாராட்டினார்.