பிரெஞ்சு தரைப்படையும் இராணுவ ஹெலிகாப்டர்களும் மாலியில் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு ஜிஹாதி தளபதியுடன் மேலும் 4 பேர் பலியானதாக பிரெஞ்சு இராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை ஐ.நா.வின் பொருளாதாரத் தடை பட்டியலில் இருந்த ஆர்.வி.ஐ.எம் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவின் இராணுவத் தலைவரான பஹ் அக் மௌசாவை குறிவைத்து நடத்தப்பட்டது. அவர் மாலியன் மற்றும் சர்வதேசப் படைகள் மீது பல தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர் என்று பிரெஞ்சு இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஃபிரடெரிக் பார்ப்ரி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
கிழக்கு மாலியின் மெனகா பகுதியில் மௌசாவின் டிரக்கை அடையாளம் காண மாலியில் உள்ள பிரெஞ்சு படைகளுக்கு கண்காணிப்பு ட்ரோன்கள் உதவியது. பின்னர், ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 பிரெஞ்சு கமாண்டோக்கள் குறிவைத்தனர் என்று பார்ப்ரி கூறினார். டிரக்கில் இருந்த 5 பேரும் எச்சரிக்கை துப்பாக்கிச் சுடுதல்களை புறக்கணித்ததோடு, அவர்கள் பிரெஞ்சு படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் லாரியில் இருந்த ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறினார்.
இது நியாயமான பாதுகாப்பு செயல் என்று அவர் விவரித்தார். பலியானவர்களின் உடல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு உட்பட்டு கையாளப்பட்டன என்றார். அமெரிக்கா உள்ளிட்ட நட்பு சக்திகள் இந்த நடவடிக்கைக்கு உளவுத்துறை பங்களித்தனவா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையில், புதிய ஜிஹாதி ஆட்சேர்ப்புகளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு மௌசாவுக்கு இருப்பதாக கூறினார். அண்மையில் சில வாரங்களாக மாலியில் நடந்த சமீபத்திய பிரெஞ்சு நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆபிரிக்காவில் பார்கேன் என்று அழைக்கப்படும் ஒரு படையில் பிரான்சின் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் உள்ளன. 2013 பிரெஞ்சு தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் இஸ்லாமிய தீவிரவாத கிளர்ச்சியாளர்கள் வடக்கு மாலியில் அதிகாரத்திலிருந்து தள்ளப்பட்டனர். ஆனால், பாலைவனத்தில் மீண்டும் ஒன்றிணைந்து இப்போது மாலியன் இராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.
பாரிஸில் 130 பேர் கொல்லப்பட்டன் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் பிரெஞ்சு இராணுவம் தனது சமீபத்திய நடவடிக்கையை அறிவித்தது. அந்த தாக்குதல் பாரிஸில் படாக்லான், இசை நிகழ்ச்சி அரங்கம், கஃபேக்கள் மற்றும் தேசிய அரங்கத்தை குறிவைத்து நடத்தப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"