Advertisment

மருத்துவமனை வாசலில் இருந்து அங்காடி கடை வரை.. கொழும்பை திணறடிக்கும் எரிபொருள் நெருக்கடி

வெள்ளியன்று மாலை 7 மணியளவில், இந்தியன் எக்ஸ்பிரஸ் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான, இலங்கையின் தேசிய மருத்துவமனையை அடைந்தபோது, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வேலைக்கு வர முடியவில்லை என்பதை கண்டறிந்தது.

author-image
WebDesk
New Update
sri lanka fuel crisis

வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர், மளிகை விநியோகம் செய்யும் வேனில் கொண்டு வரப்பட்டார். சுபாஜித் ராய்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உயரடுக்கினரையும் சாதாரண மக்களையும் பாதித்துள்ளது.

Advertisment

கொழும்பின் தெருக்களில், குறைவான தனியார் கார்கள் ஓடுகின்றன, பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர்.  பெரும்பாலான மக்கள் தங்களிடம் உள்ள சிறிய எரிபொருளை "அவசரத்திற்கு" வைத்துக்கொண்டு நீண்ட தூரம் நடந்து வருகின்றனர்.

publive-image
இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு அதன் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தி வருகிறது. (Reuters)

தலைநகரின் மருத்துவமனைகளும், இந்த பற்றாக்குறையின் பாதிப்பை எதிர்கொள்கிறது. வெள்ளியன்று மாலை 7 மணியளவில், இந்தியன் எக்ஸ்பிரஸ் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான, இலங்கையின் தேசிய மருத்துவமனையை அடைந்தபோது, ​​ டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வேலைக்கு வர முடியவில்லை என்பதை கண்டறிந்தது.

எரிபொருள் நிலையங்களில் மருத்துவ நிபுணர்களுக்கான முன்னுரிமை அணுகலை அரசாங்கம் அனுமதித்துள்ளது, ஆனால் பலருக்கு இது மிகக் குறைவு என்று அவர்கள் கூறினர்.

அடையாளம் கூற விரும்பாத ஒரு மூத்த மருத்துவர், மருத்துவமனைக்குச் செல்ல இரண்டு பேருந்துகளை மாற்ற வேண்டும், அது "மிகவும் கடினம்" என்றார். "பல நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

publive-image
கொழும்பில் உள்ள விநியோக நிலையமொன்றில் வீட்டு எரிவாயுவை வாங்குவதற்கு, காலி சிலிண்டர்களுடன் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். (AP/PTI)

கொழும்பில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம, "எரிபொருள் நெருக்கடி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்கள் மருத்துவமனைகளுக்கு வர முடியவில்லை... வழக்கமான பரிசோதனைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில், பள்ளிகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான, இல்லத்தரசி சங்கா (32) கூறுகையில், “கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இப்போது ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று சொல்கிறார்கள்... மின்வெட்டு காரணமாக ஆன்லைன் வகுப்புகளும் கடினமாக உள்ளன.

தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலை, கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. டீசல் கடந்த ஆண்டு இலங்கை ரூபாய் மதிப்பின்படி, 106 ரூபாயில் இருந்து லிட்டருக்கு 440 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 130 ரூபாயில் இருந்து 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. கறுப்புச் சந்தையில், பெட்ரோல் லிட்டருக்கு சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இலங்கை நாணயத்துக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 4.50 காசுகளாக இருந்தது.

இதனால் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள கீல்ஸ் மார்கெட்டில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெவ்வேறு பொருட்களின் விலைகளை - வாடிக்கையாளர்கள் மற்றும் கடை மேலாளர்களின் உதவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. அதில், கடந்த ஆண்டை விட அவை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்தது, அதில் சில பொருட்கள் ரேஷன் அடங்கும்.

publive-image
தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட, கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. (AP)

அலமாரிகளில் சுவரொட்டிகளில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பாக்கெட் பால் பவுடர், 2 கிலோ அரிசி மற்றும் 12 பாட்டில் தண்ணீர் என்று வரம்பிடப்பட்டுள்ளது.

மேலாளர் மற்றும் வாடிக்கையாளர்களின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் இருந்த விலைப் பட்டியல் இப்போது வியத்தகு முறையில் மாறிவிட்டது: உருளைக்கிழங்கு கடந்த ஆண்டு, இலங்கை ரூபாயின்படி கிலோ ரூ. 110 முதல் தற்போது ரூ. 520 வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் ரூ 65 முதல் 280, சர்க்கரை ரூ 65 முதல் 451, மாவு ரூ 160 முதல் 350, அரிசி ரூ 95-110 முதல் 480 வரையிலும் மற்றும் முட்டை ரூ 13 முதல் 55 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர டாய்லெட் ரோல் கடந்த ஆண்டு ரூ. 30-40 ஆக இருந்தது. இப்போது ரூ. 215 உள்ளது. சர்ஃப் எக்செல் டிடர்ஜென்ட் பவுடர் ரூ. 350 முதல் 980 ஆகவும், கோககோலா லிட்டருக்கு ரூ. 110 முதல் 390, மேகி நூடுல்ஸ் ரூ. 110 முதல் 360/பேக் மற்றும் லக்ஸ் சோப் ரூ. 80 முதல் 225 ஆக உள்ளன.

தனது குடும்பம் பழங்கள் மற்றும் மீன் நுகர்வை குறைத்துள்ளதாக தேர்தல் ஆலோசகர் குழுவொன்றின், எக்ஸிகியூட்டிவ் டிரைக்டர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

“எனது 17 வயது மகனுக்கு ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் நாங்கள் அவனுக்கு மட்டும் போதுமான அளவு பழங்களை வாங்குகிறோம். இந்த அடிப்படைத் தேவைகளை நாமே மறுத்தால், மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்,” என்றார்.

publive-image
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மருந்து விநியோக கவுண்டரில் மருந்துகளை பெற்றுக்கொள்ள நோயாளிகள் காத்திருக்கின்றனர். (Bloomberg)

உலக உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இலங்கை தொடர்பான அதன் சமீபத்திய நிலைமை அறிக்கையில் கூறியது:

“விண்ணை முட்டும் உணவு செலவுகள் அதை வாங்குவதை கடினமாக்குகிறது… சுமார் 6.7 மில்லியன் மக்கள் போதுமான உணவுகளை உட்கொள்ளவில்லை மற்றும் 5.3 மில்லியன் மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவை குறைத்து விட்டனர்.

உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, 5 மில்லியன் மக்கள் அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

எரிபொருள் நெருக்கடிக்கு அந்நிய செலாவணி பற்றாக்குறையே காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லலிதசிறி குணருவன் கூறினார். "உண்மையான புற்றுநோய், அன்னிய செலாவணி பற்றாக் குறையாகும், மேலும் எரிபொருள் நெருக்கடி அதன் அறிகுறியாகும், என்று அவர் கூறினார், தற்போதைய நிலைமைக்கு அடுத்தடுத்த அரசாங்கங்களை அவர் குற்றம் சாட்டினார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் வழக்கறிஞரும், மூத்த ஆய்வாளருமான பவானி பொன்சேகா, “விலைவாசி உயர்வு அனைவரையும் பாதித்தாலும், அது மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களையே மோசமாக பாதித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸ்கள் சில இடங்களுக்கு செல்ல முடிவதில்லை.

சனிக்கிழமையன்று, இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு வாகனத்திற்கும் QR குறியீடுகளுடன் "உத்தரவாதமான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை" ஒதுக்குவதற்கான எரிபொருள் பாஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியது. பல்வேறு நாடுகளுக்கு (எரிபொருளுக்காக) கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே, எந்த நாடு எங்களுக்கு உதவ வந்தாலும், அதை நாங்கள் பாராட்டுகிறோம். தற்போது, ​​ எங்களுக்கு கடன் வழங்கியுள்ள ஒரே நாடு இந்திய அரசாங்கமே” என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதுவரை, இந்தியா இலங்கைக்கு எரிபொருள் உட்பட 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment