ஆர்.சந்திரன்
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வாழும் 8.7 கோடி ஃபேஸ்புக் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட தகவல்களை, அவர்களது அனுமதியின்றி பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டு வீரியம் பெற்று வருகிறது
இந்த குற்றச்சாட்டு எழுந்ததில் இருந்து அமெரிக்க ஐடி நீறுவனங்களிடையே மார்க் ஜூக்கர்பெர்க் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மறுபுறம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகக் குழு, இவரை அதன் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எனினும், அது உண்மையல்ல என பின்னர் தெரிய வந்தது. ஆனால், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்கள் பலரும் இது குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதையொட்டி, செய்தியாளர்களிடம் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பேசிய மார்க் ஜூக்கர் பெர்க், தான் செய்த தவறை உணர்ந்துள்ளதாகவும், அதற்காக வருந்துவதாகவும், தவறுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பிரச்னையில் வேறு யாரையும் பலிகடா ஆக்கி, பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும், தன்னை பதவி விலகுமாறு இதுவரை யாரும் கேட்கவில்லை எனவும், ஃபேஸ்புக் நிறுவன நிர்வாகக் குழுவில் அப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால், ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்க பல ஆண்டுகள் ஆகும் என கருதுவதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில், இதுகுறித்து அமெரிக்க காங்கிரஸில் அடுத்த வாரம் நடத்தப்பட உள்ள விசாரணையில் அவர் நேரில் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.