இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே; சீனாவுடன் உறவை மீட்டெடுக்க விருப்பம்

Gotabaya Rajapaksa if win restore the relationship with China: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளராக உள்ள கோத்தபய ராஜபக்ச வரும் நவம்பர்...

Gotabaya Rajapaksa if win restore the relationship with China: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளராக உள்ள கோத்தபய ராஜபக்சே வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் நாட்டின் முதன்மை கடன் வழங்குநரான சீனாவுடனான “உறவை மீட்டெடுப்பார்” என்று அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளராக உள்ளார்.

தற்போது இலங்கை ஜனாதிபதியாக உள்ள மைத்ரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஊழல், அதிக விலை நிர்ணயம் மற்றும் அரசாங்க நடைமுறைகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி அனைத்து சீன முதலீட்டு திட்டங்களையும் ஆரம்பத்தில் நிறுத்தி வைத்தார். அதற்கு அடுத்த ஆண்டு, சிறிசேனா அரசாங்கம் சிலவற்றில் மாற்றங்களைக் கோரி சீன திட்டங்களை மீண்டும் தொடங்க அனுமதியளித்தது. ஆனால், அதன் பிறகு இலங்கை – சீனா இடையேயான உறவு என்பது சிதைந்துபோனது.

இந்நிலையில், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும் சீன ஆதரவு தலைவருமான மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே நவம்பர் தேர்தலில் வெற்றிபெற்றால் சீனாவுடனான உறவை சரிசெய்யத் தயாராக உள்ளார் என்று அவருடைய ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பலிதா கொஹோனா கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இப்போது சீனா எங்களை வித்தியாசமாகப் பார்க்கிறது. கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியாகும் போது … அவர் சரியாக சாதனை படைத்து இலங்கை – சீனா இடையே முன்பு இருந்த உறவை மீண்டும் மீட்டெடுப்பார்” என்று கூறினார்.

இந்த வாரம், தெற்காசியாவின் மிக உயரமான தாமரை கோபுரத்தைக் கட்டுவதற்கு சீன நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி ஒரு அரசியல் அதிர்வலையை சிறிசேன ஏற்படுத்தினார். இது குறித்து விசாரிப்பதாக இலங்கை நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சீன நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் தனது பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் எந்த தவறும் செய்யவில்லை என்று சீனா பலமுறை மறுத்துவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மைத்ரிபால சிறிசேனவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சே, சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமொன்று இலங்கையிடமிருந்து 2 பில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தானது, சீனா அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் என கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக இலங்கையின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரிடையே அவர் செல்வாக்கு பெற்றதன் காரணமாக நவம்பர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னணியில் உள்ளார்.

இருப்பினும், அவரது வேட்புமனு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் மீது நிதி முறைகேடு மற்றும் அமெரிக்க குடியுரிமையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களில் சட்டரீதியான பிரச்னைகள் இருப்பதால் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் கோத்தபய ராஜபக்சேவின் அமெரிக்க குடியுரிமை எதிர்க்கட்சிகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close