அமெரிக்காவிற்கு தற்காலிக விசா மூலமாகேவா அல்லது சட்டப்பூர்வமாகவோ குடியேறுபவர்களில் பணக்காரர்களுக்கு மட்டுமே இனி கிரீன் கார்டு வழங்க, அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை பிறப்பித்த உத்தரவில், உணவு, மருத்துவம், வீடு போன்ற அரசின் சலுகைகளை சார்ந்திருப்பவர்கள், கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படும். அமெரிக்க குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, அவர்கள் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருபவர்கள், அரசின் சலுகைகளை எதிர்பாராமல், தங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதை அவர்கள் உறுதிபடுத்த வேண்டும் . அவர்களுக்கு மட்டுமே, இனி கிரீன் கார்டு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், அரசின் சலுகைகளை எதிர்பாராது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்பவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதால், அரசின் சலுகைகள் மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு சென்றடையும். அவர்களும் தங்கள் வாழ்வில் ஏற்றம் அடைவர். இந்த திட்டத்தின் மூலம். அமெரிக்கவாழ் மக்கள் அதிகம் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.