அமெரிக்காவில் எச் 1 பி விசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் 7.5 லட்சம் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.
இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வரும் என கூறப்பட்டது.
எச்-1 பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி விசாவை நீடித்து கொள்ளலாம். இவ்வாறு ஒரு நபர் 6 ஆண்டு காலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்ற முடியும். அவ்வாறு 6 ஆண்டு பணிபுரிந்த பிறகு அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்றுவதற்கான கிரீன் கார்டை பெற்று கொள்ளலாம். 6 ஆண்டு பணியாற்றும் நபர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் அந்த நபர் 6 ஆண்டுக்கு பிறகும் அமெரிக்காவில் தங்கி இருந்து தொடர்ந்து பணி செய்யலாம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் எத்தனை கிரீன் கார்டு வழங்குவது என்ற நடைமுறைகளை அமெரிக்கா வைத்துள்ளது. அவ்வாறு ஒவ்வொரு நாட்டுக்காரர்களுக்கும் கிரீன் கார்டு வழங்கப்படும். இந்த கார்டை வழங்குவதாக ஒப்புதல் அளித்து விட்டால் அந்த நபர் காத்திருந்து கிரீன் கார்டை பெற்று கொள்ளலாம்.
ஆனால், இப்போது இந்த விசா நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இப்போது கொண்டு வந்துள்ள மாற்றத்தின்படி எச்-1 பி விசா பெற்ற நபர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டால் அந்த கார்டு கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது.
6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். அவருக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கும் ஒதுக்கீட்டு முறையில் கிரீன் கார்டு கிடைத்தால் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து பணியை தொடரலாம். இவ்வாறு விசா நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வந்திருப்பதால் எச்-1 பி விசா பெற்று இனி 6 ஆண்டு பணிபுரிந்தவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அது மட்டும் அல்ல, எச்1 பி விசா பெற்ற ஆணோ, பெண்ணோ தங்கள் கணவர் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம். இதற்கு எச்-4 இ.ஏ.டி. என்ற விசா வழங்கப்பட்டது.
இந்த விசா வைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவில் பணியாற்றி கொள்ளலாம். இப்படித்தான் இந்தியாவில் இருந்து செல்லும் கணவன் மனைவி இருவரும் அங்கு பணியாற்றுகிறார்கள். புதிய விசா நடைமுறைப்படி எச்-4 இ.ஏ.டி. விசா வழங்கியதை வாபஸ் பெறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, எச்1 பி. விசா பெற்றவரின் கணவன் அல்லது மனைவி இனி அமெரிக்காவில் பணியாற்ற முடியாது. இந்த நடைமுறைகளால் எச்-1 பி. விசா பெற்று 6 ஆண்டுகள் பணி முடித்தவர்களும், எச்-4 இ.ஏ.டி. விசா வைத்திருப்பவர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைய ஏற்பட்டு உள்ளது.
இதனால் 5 லட்சம்-7.5 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் பாதிப்பக்கபடுவார்கள் என கூறப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) நிர்வாகி ஜோனாத்தன் வாஷிங்டன் கூறுகையில், ''வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீட்டிக்கும் விதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை ஏதும் நடக்கவில்லை. அந்த சட்டத்தில் மாற்றம் ஏதும் கொண்டு வந்தாலும், எச்.1பி விசா வைத்துள்ளவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அவர்கள் ஒரு வருடம் நீட்டிப்பு பெற விண்ணப்பிக்கலாம். அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்துங்கள் என்ற அதிபரின் முடிவுக்கு ஏற்ப பல கொள்கைகளை ஆலோசித்து வருகிறோம். இதில், பணி நிமித்தமான விசாவும் அடங்கும்'' இவ்வாறு அவர் கூறினார்.