அமெரிக்க தொழிலாளர்களுக்கு தொழில்முறை பயிற்சி (apprentice) வழங்க அதிக நிதி ஒதுக்கும் பொருட்டு, H-1B விசா பெற விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
H-1B விசா என்பது திறமை மற்றும் தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்கள், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் பணியாற்ற வழங்கப்படும் விசா ஆகும். இந்த விசாக்களை, இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களே அதிகம் பெற்று வருவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அது உண்மையும் தான் கூட....
அமெரிக்கர்களுக்கே அமெரிக்காவில் வேலை என்பதையே, அதிபர் டிரம்ப், முதலிலிருந்தே தொடர்ந்து கூறிவந்தார். இது அங்குள்ள இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க தொழிலாளர்களுக்கு தொழில்முறை பயிற்சி (apprentice) வழங்க அதிக நிதி ஒதுக்கும் பொருட்டு, H-1B விசா பெற விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக தொழிலாளர் துறை செயலாளர் அலெக்சாண்டர் அகோஸ்டா கூறியுள்ளார்.
இந்த கட்டண உயர்வு, 2019 அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அவர் மேலும் கூறினார்.
கட்டண உயர்வு எந்த அளவில் இருக்கும் என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்த கட்டண உயர்வால், அங்குள்ள இந்திய நிறுவனங்கள் நிதிச்சுமைக்கு உள்ளாக நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.