தலைமை நீதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடிவு; பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

தலைமை நீதிபதியின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டங்கள் அவசியம்; சட்டம் இயற்றப்படாவிட்டால், “வரலாறு நம்மை மன்னிக்காது” – பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

shehbaz sherif
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் (கோப்பு படம்)

PTI

தலைமை நீதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றவில்லை என்றால், “வரலாறு நம்மை மன்னிக்காது” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செவ்வாயன்று கூறினார், இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாட்டின் தலைமை நீதிபதியின் தன்னிச்சையான அதிகாரங்களை கேள்வி எழுப்பியதற்கு அடுத்த நாள் இந்த அறிவிப்பு வந்தது.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஷேபாஸ் ஷெரீப், உச்ச நீதிமன்ற நீதிபதி மன்சூர் அலி ஷா மற்றும் நீதிபதி ஜமால் கான் மண்டோகைல் ஆகியோரின் மாறுபட்ட தீர்ப்பைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். இந்த நீதிபதிகள் எந்தவொரு பிரச்சினையிலும் தன்னிச்சையான முடிவு மற்றும் வெவ்வேறு வழக்குகளை விசாரிக்க விருப்பமான பெஞ்சுகளை அமைத்தல் போன்ற தலைமை நீதிபதியின் வரம்பற்ற அதிகாரத்தை வசைபாடினர்.

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் பிப்ரவரி 22 அன்று தானாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பிய வழக்கில் இந்த நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தலைமை நீதிபதியின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டங்களின் அவசியம் குறித்து ஆவேசமாக பேசிய ஷேபாஸ் ஷெரீப், சட்டம் இயற்றப்படாவிட்டால், “வரலாறு நம்மை மன்னிக்காது” என்று கூறினார்.

தலைமை நீதிபதியின் தன்னிச்சையான அதிகாரம், அரசியலமைப்பின் 184 வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், பல ஆண்டுகளாக அதன் பயன்பாடு தலைமை நீதிபதிகளின் பங்கில் பாரபட்சமான தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஒரு பெஞ்சில் அங்கம் வகிக்கும் இரண்டு நீதிபதிகளும் முதல் முறையாக வெளிப்படையாக சவால் விடுத்தனர், மார்ச் 1 அன்று அதன் 3-2 பெரும்பான்மைத் தீர்ப்பில், பஞ்சாபில் தேர்தல் நடத்த ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வியுடனும் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் தேர்தல் நடத்த ஆளுநர் குலாம் அலியுடன் கலந்தாலோசிக்குமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு (ECP) உத்தரவிட்டது.

தேர்தல் தாமதத்திற்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை சமாளிக்க முதலில் ஒன்பது பேர் கொண்ட பெஞ்சை உருவாக்கிய தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல், மீண்டும் ஐந்து பேர் கொண்ட பெஞ்சாக மாற்றி அமைத்தார். ஏனெனில் ஒன்பது நீதிபதிகளில் இருவர் தானாக முன்வந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக முடிவு எடுக்க மறுத்தனர், மற்ற இரண்டு நீதிபதிகள் தங்களைத் தாங்களே விலக்கிக் கொண்டனர், இது தலைமை நீதிபதியை புதிய பெஞ்ச் அமைக்க தூண்டியது.

நீதிபதி ஷா மற்றும் நீதிபதி மண்டோகைல் ஆகியோர் தங்கள் விரிவான 28 பக்க மறுப்புக் குறிப்பில், தானாக முன்வந்து வழக்கின் 3-2 தீர்ப்பை நிராகரித்து, வழக்கின் பராமரிப்பை நிராகரிப்பதற்கான 4-3 தீர்ப்பு என்று கூறி, முக்கியமான வழக்குகளுக்கு பெஞ்ச் அமைக்கும் தலைமை நீதிபதியின் அதிகாரத்தை குறைகூறினர்.

அக்டோபர் 8 ஆம் தேதி வரை இரு மாகாணங்களிலும் தேர்தலை ஒத்திவைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஆதரிக்கும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், தலைமை நீதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கானுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் நடப்பதாகவும், இம்ரான் கானைப் பொறுப்பேற்க வைக்க நீதிமன்றங்கள் தயாராக இல்லை என்றும் பிரதமர் கூறினார்.

“பொறுத்தது போதும்” என்றும், நீதிமன்றத்திற்கு “பிடித்தவர்களை” பாகிஸ்தானுடன் விளையாட அரசாங்கம் அனுமதிக்காது என்றும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்றும் ஷேபாஸ் ஷெரீப் கூறினார்.

சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வை அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்து, யாரும் கடக்கக் கூடாது என்று சிவப்புக் கோட்டை நிர்ணயித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும், அந்த பிரச்சனைகளை கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.

ஒரு சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு தேர்தலை நடத்த அரசியலமைப்பின் 90 நாட்களுக்கு அப்பால், மாகாண தேர்தலை அக்டோபர் 8 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதற்கான பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: History pak pm sharif parliament curtail powers chief justice

Exit mobile version