சவுமிய அசோக்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளில் நேற்று இந்தியாவைப் பற்றிய செய்திகளே மையமாக இருந்தது என்று சொல்லலாம். "நான் சீனாவை நேசிக்கிறேன்” என்று இந்திய மக்கள் கூறும் வீடியோவும், சென்னையிலுள்ள முக்கியத் தளங்களை 360 டிகிரியில் எடுத்த வீடியோவும் நேற்று சீனாவின் சேனல்களில் பரவலாக காண்பிக்கப்பட்டன.
பௌத்தம், பாலிவுட், ஆமிர்கான் போன்றவைகளும் அங்குமிங்குமாக செய்தியாக்கப்பட்டன. டாங் அரசக் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்ட சென்னை-புஜியன் உறவுகள் குறித்தும், தமிழ் திரையுலகம் பற்றிய குறிப்பும் சீனா ஊடகங்களில் தென்பட்டது.
மோடி - ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் 'சீனா டெய்லி' என்ற ஆங்கில நாளிதழில் , " ஜீ ஜின்பிங்கிற்கு இந்தியாவில் அன்பான வரவேற்பு " என்பதே முதல் பக்கத்தின் தலைப்பு செய்தியாய் இருந்தது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளுக்கிடையில் இந்த சந்திப்பால் அரசியல் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்ற கருத்தையும் பதிவு செய்திருந்தன. மக்கள் தினசரி (பீப்பில் டெய்லி) என்ற இன்னொரு சீன அரசின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் , ' முதல்வர் பழனிசாமி மலர்வளையம் கொடுத்து சீன அதிபரை வரவேற்ற புகைப்படத்தையும், பிரதமர் மோடி, சீன அதிபரோடு கைகுலுக்கும் புகைப்படத்தையும் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தினர்.
இந்தியா நியூஸ் சேனல்களைப் போன்ற, சீனா அரசு செய்தி டீவி சேனல்களின் செயல்பாடுகள் இருந்தன. சீனா அதிபர் சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரத்திற்கு செல்லும் காட்சியை அங்குள்ள சேனல்கள் துல்லியாமாக செய்தியாக்கின. உச்சிமாநாடு இடத்தை யார் தேர்வு செய்தது, ஏன்.... மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது, என்று இந்திய சேனல்கள் விவாதித்தைப் போலவே, சீனா தொலைகாட்சிகளிலும் விவாதம் நடந்தேறியது.
அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "நமது இருநாடுகளின் முன்னோர்கள் பல தடைகளையும் தாண்டி இலக்கியம், கலை, தத்துவம் போன்ன்றவைகளின் மேம்பாட்டினை உயர்த்தினர்" என்ற வாசகத்தை பதிவு செய்திருந்தது.
சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் வெளியிட்ட ஒரு செய்தியில் , "சர்வதேச அமைதியையும், சமாதானத்தையும் ஊக்குவிக்கும் பரந்த பொறுப்பை இரு நாடுகளும் ஏற்க வேண்டும்" என்று சீனா அதிபர் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளது.
இதற்கிடையில், சீனா அரசால் நடத்தப்படும் குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், நடந்து முடிந்த இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்கு இரு நாட்டு மக்களும் நம்பிக்கையான பாதையில் சென்றாலும், சில மேற்கத்திய ஊடகங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பை எற்படுத்துவதற்காக, ஆங்காங்கே இருக்கும் சில வேறுபாடுகளை முதன்மைபடுத்தி செய்தி வெளியிடுகின்றனர் என அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இது எதிர்பாராதது அல்ல. மேற்கத்திய நாடுகள் சிலர் பெய்ஜிங்கிற்கும், புதுடெல்லிக்கும் இடையில் தொடர்ந்து ஒரு பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இரு நாடுகளும் படிப்படியாக தங்கள் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான வலுவான திறனை உருவாக்குகின்றன என்பதே நிதர்சனமான உண்மை என்பதோடு அக்கட்டுரை முடிவடைகிறது.
ஆனால், சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சீனா அதிபர் ஜீ ஜிங்பின் நேபாளம் செல்லும் செய்தி அனைத்திலும் முதன்மையாக்கப்பட்டன. 23 வருடங்களுக்குப் பிறகு சீனா அதிபர் ஒருவர் நேபாளம் செல்கிறார், சீனா-நேபாளம் உறவுகள் அடுத்த நிலையை நோக்கி நகர்கின்றன, தெற்காசியத்தில் அமைதி வலுப்படும் என்பதே தற்போது சீனாவின் செய்தியாய் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.