அமெரிக்காவின் கடலோர பகுதிகளை மிரட்டிய புளோரன்ஸ் புயல் வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புளோரன்ஸ் புயல் :
அமெரிக்கா மகாணத்தை தனது கோரத்தாண்டவத்தால் அச்சுறுத்திய புளோரன்ஸ் புயலை அந்நாட்டு மக்கள் எளிதில் மறந்து விடமாட்டார்கள். அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைக்காலம் ஆரம்பமானது. இதன்காரணமாக அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றத்தழுத்த பகுதி புளோரன்ஸ் புயலாக உருவெடுத்து மெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது.
இதனால், அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய பகுதிகளில் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து 3 மாகாணங்களிலும் உள்ள கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள சிறைச்சாலைக் கைதிகள் 1000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
மேலும், 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. சுமார் 100 கிமீ வேகத்தில் வீசிய இந்த புயலால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து, கரையோர பகுதிகளை தாக்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடானது.
அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு புளோரன்ஸ் புயல் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தனர். 12 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புயல் வலுவிழந்தாலும் வடக்கு கரோலினா,ஜார்ஜியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளில் அறிவிக்கபட்ட அவசரநிலையை அரசு விலக்கிகொள்ளவில்லை.பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புளோரன்ஸ் புயலால் இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.