அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தியா குறித்த கருத்தரங்கில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக்கூறி பேச்சை தொடங்கிய அவர், நாளை நமதே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். தேர்தல் அரசியலை தாண்டி காந்தி, பெரியார் எனது ஹீரோக்கள். இவர்கள் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டார்கள்.
நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். நான் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். பணத்திற்காக அல்ல -மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள்.
2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற போகிறேன்.
நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. எனது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான். ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவி இல்லை என நினைக்கிறேன். ஆனால், எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. அவரது கொள்கையை பொறுத்தே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எனக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக ரஜினியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்.
திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது.
எனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை. அதனை பிறர் தீர்மானிக்கக் கூடாது. ஒரு கல்லூரி விழாவில் கையெழுத்திட்டு என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொண்டேன். இந்த விழாவில் இரண்டாவது முறையாக என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அடுத்த தேர்தலுக்காக காத்திருப்பேன்.
எனது கட்சி தனி மனித கட்சி அல்ல. 2, 3, 4-வது கட்ட தலைவர்களும் இருப்பார்கள். தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல” என கமல் பேசியுள்ளார்.