முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் தேசிய மாணவர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து வடமாகாண தமிழ் தேசிய மாணவர்பேரவை தலைவர் மணிவண்னண் தனுசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரையிலான பகுதியானது முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும். இந்தக் காட்டில் 177 ஏக்கரை அழித்து முஸ்லிம் மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த சட்ட விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் இத்திட்டத்தை கட்டாயமாக எதிர்க்க வேண்டியதுள்ளது. போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, சட்ட விரோத குடியேற்றங்களை உருவாக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நாம் எல்லோரும் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு, சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக ஒன்றினைந்து எமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். சட்விரோத குடியேற்றத்தை எதிர்க்கும் இளைஞர் அணியால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஞாயிறு காலை 11.00 மணிக்கு ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
அந்தவகையில் இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மாணவர் பேரவையினர் முழு ஆதரவை வழங்குவோம்’ என வடமாகாண தமிழ் தேசிய மாணவர்பேரவை தலைவர் மணிவண்னண் தனுசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பேரணியில் கலந்து கொள்வதற்கு வசதியாக யாழ்பாணத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.