இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அணு ஆயுதம் குறித்த கேள்விக்கு, "அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம். எதிரி நாடுகள் பயன்படுத்தினால் மட்டுமே பாதுகாப்புக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது என்ற கொள்கையை இந்தியா கையாண்டு வருகிறது. ஆனால் இனி அந்தக் கொள்கையில் மாற்றம் வரலாம். எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணுக் கொள்கையில் மாற்றங்கள் வரலாம்" எனப் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலக நாடுகள் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "பாசிச, இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் மேற்கொள்ளவேண்டும். இது குறிப்பிட்ட பிராந்தியத்துக்கான பிரச்னை மட்டுமல்ல. உலகம் முழுதிற்குமே தாக்கம் ஏற்படுத்தக் கூடியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெறிபிடித்து அலைகின்றனர். சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது பரவும்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.