பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாலியல் வன்முறை என்பது ஆபாசத்தின் ஒரு தயாரிப்பு. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வார இறுதியில் பொதுமக்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் ஒருவர் இம்ரான்கானிடம், நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்களில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது, அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரசு என்ன செய்ய போகிறது என்று கேள்வி எழுப்பினார், என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த இம்ரான்கான் நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்ததற்கு ’அநாகரீக நடத்தையே’ காரணம் என்றார். மேலும் அவர் இஸ்லாம் மதத்தைப் பற்றியும் பர்தா அணிவது பற்றியும் பேசினார். மேலும், சமுதாயத்திலிருந்து ஆபாச தூண்டலை அகற்றவேண்டும். ஏனெனில் அதை கட்டுப்படுத்தும் மன உறுதி எல்லோரிடமும் இல்லை என்றும் கூறினார்.
இம்ரான் கான், தான் 70 களில் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றபோது, அங்கு ‘செக்ஸ், போதைப்பொருள் மற்றும் ராக் அன் ரோல்’ கலாச்சாரம் இருந்தது இது அவர்களின் குடும்பத்தை நேரடியாக பாதித்தது. இப்போதெல்லாம் சமூகத்தின் மோசமான தன்மை காரணமாக விவாகரத்து விகிதங்கள் 70 சதவீதம் உயர்ந்துள்ளன என்று கூறினார்.
மேலும், இந்திய திரையுலகில் ஹாலிவுட்டின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதும் இதே போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடப்பதாகவும் டெல்லி இப்போது ஒரு கற்பழிப்பு தலைநகரமாக மாறியுள்ளது, என்றும் கூறியுள்ளார்.
பிரதமரின் கருத்துக்களுக்கு பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் எதிர் வினை ஆற்றியுள்ளது. பிரதமரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளது.
இது கற்பழிப்பு சம்பவங்கள், ஏன், எங்கு, எப்படி நடக்கிறது என்பது பற்றிய அரசாங்கத்தின் குழப்பமான அறியாமையை காட்டிகிறது. அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டுவதாக உள்ளது. சிறு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் முதல் ஆணவக் கொலைகள் வரை எப்படி நடக்கிறது என அரசாங்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் கூறுவதாக, டான் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி நாட்டில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகிறதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் 22,000க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்துறையில் பதிவாகியுள்ளன என்றும் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil