Advertisment

தோஷகானா ஊழல் வழக்கு; இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு

தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு; சிறையிலிருந்து விரைவில் விடுதலை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Imran Khan

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (கோப்பு புகைப்படம் - ஃபேஸ்புக்)

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

"தீர்ப்பின் நகல் விரைவில் கிடைக்கும்... நாங்கள் இப்போது கூறுவது, <இம்ரான் கானின்> கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது" என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் (IHC) தலைமை நீதிபதி அமீர் ஃபரூக் கூறியதாக, பாகிஸ்தான் ஊடக நிறுவனமான Dawn தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை தலைமை நீதிபதி பரூக் மற்றும் நீதிபதி தாரிக் மெஹ்மூத் ஜஹாங்கிரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்தது. தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த இம்ரான் கானின் மனு மீதான தீர்ப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்த ஒரு நாள் கழித்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.

இருப்பினும், தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாபில் உள்ள அட்டாக் சிறையில் இருந்து இம்ரான் கான் எப்போது விடுவிக்கப்படுவார் என்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

இம்ரான் கானின் சட்ட விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் நயீம் ஹைதர் பன்ஜோதா, X தளத்தில், "தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்," என்று உருதுவில் பதிவிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குழு ஒன்று கூடும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த இம்ரான் கான் சகோதரிகள்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் சட்டக் குழுவைத் தவிர, இம்ரான் கானின் சகோதரிகள் அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகியோர் தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் இருந்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், தீர்ப்பைக் கொண்டாடிய பி.டி.ஐ கட்சி தொண்டர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடி, தலைவரை விடுவிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். அவரது வழக்கறிஞர்கள் ‘ரிஹா கரோ <அவரை விடுதலை செய்>’ என்று கோஷமிடும் வீடியோ கட்சியால் வெளியிடப்பட்டது.

இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு, அவரை எந்த வழக்குகளிலும் கைது செய்யக்கூடாது என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பி.டி.ஐ கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ரியாக்‌ஷன்

இம்ரான் கானிடமிருந்து உயர் பதவியை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தீர்ப்பை விமர்சித்தார் மற்றும் இம்ரான் கானின் தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் "நிறுத்தப்படவில்லை" என்பதை நினைவுபடுத்தினார்.

"முடிவு வருவதற்கு முன்பு, என்ன நடக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும், எனவே இது நீதி அமைப்பு பற்றிய கவலையாக இருக்க வேண்டும்" என்று ஷெபாஸ் ஷெரீப் உருதுவில் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2018-2022 பதவிக் காலத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் பெற்ற அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இம்ரான் கானின் அரசியல் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

(கூடுதல் தகவல்கள்: PTI)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Pakistan Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment