காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370ல் மத்திய அரசு கடந்த 5ம் தேதி திருத்தம் மேற்கொண்டது. இதனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட, ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி மற்றொரு யூனியன் பிரதேசமகாவும் பிரிக்கப்பட்டது.
இதனால் தவறான தகவல்களை, வதந்திகளை பரப்பி விரும்பத்தகாத விளைவுகள் நடப்பதைத் தடுக்கும் பொருட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை, அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களின் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுநாள் வரை காஷ்மீரில் பறந்த மாநில கொடி தரையிறக்கப்பட்டு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவில்லை என்று சொன்னாலும், எதிர்க்கட்சிகள் அதனை முற்றிலும் மறுத்து வருகின்றன.
இந்நிலையில், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பகுதியை உபயோகப்படுத்துவதில் தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் சௌத்ரி, இந்தியா - ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் வான் எல்லைகளை பயன்படுத்தவும் தடை விதிக்க அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், "இந்தியாவுக்கு முழுமையாக வான் எல்லையை பயன்படுத்த பிரதமர் ஆலோசித்து வருகிறார். ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்திற்கு, பாகிஸ்தான் வான் வழிகளை முற்றிலும் நிறுத்தவும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹூசைன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.