பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளதால், புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் 272 தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதம் உள்ள 70 இடங்கள் நியமன அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் 4 மாகாணங்களுக்குட்பட்ட 577 இடங்களுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 85 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டது.
இம்ரான் கான் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. பகல் 2 மணி நிலவரப்படி, 119 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி, 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித், தனது முன்னாள் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், "22 ஆண்டுகள் கழித்து, பல அவமதிப்புகள், தடைகள் மற்றும் தியாகங்களைக் கடந்து, எனது மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகிறார். தோல்விகள் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக் கொண்டு, விடாப்பிடியாக நின்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இதுவொரு பாடமாகும். வாழ்த்துகள்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெமிமாவை 1995ல் திருமணம் செய்த இம்ரான் கான், 2004ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெமிமாவை விவாகரத்து செய்த பின்னர், இம்ரான் கான் இரு முறை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.