ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அங்குள்ள மாற்றுத்திறனாளி சிறுவனுடன் கழித்த தருணங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ள ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு அந்நாட்டுக்கு சென்றார். இந்நிலையில், இன்று (திங்கள் கிழமை) அந்நாட்டு மக்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது, பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கில் அமைந்துள்ள புலாகேன் மாகாணத்தை சேர்ந்த கர்லோ மிகேல் என்ற 9 வயது சிறுவனிடம் உரையாடினார். அச்சிறுவன் மாற்றுத்திறனாளியாவான். புகழ்பெற்ற ஜெய்ப்பூர் ஃபூட் எனப்படும் செயற்கை கால்களை அச்சிறுவன் பொருத்தியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் புகைப்படம் பிரதமர் நரேந்திரமோடியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அச்சிறுவன், தனக்கு இந்த செயற்கை கால்கள் எல்லாவித செயல்களையும் செய்ய எவ்வளவு உதவிகரமாக உள்ளது என பிரதமர் மோடியிடம் விளக்குகிறான்.
மேலும், “நான் காவல் துறை அதிகாரியாக பனியாற்ற விரும்புகிறேன்”, என அச்சிறுவன் கூறியதாக பிரதமர் மோடி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜெய்ப்பூர் ஃபூட்-ஐ பயனாளிகளுக்கு வழங்கிவரும் மஹாவீர் அறக்கட்டளையை சேர்ந்தவர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.