/indian-express-tamil/media/media_files/2025/09/23/jaishankar-and-rubio-discuss-2025-09-23-07-09-28.jpg)
வரிப்போர், H-1B விசா கட்டண உயர்வு: பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தியப் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் திங்கட்கிழமை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர். இந்திய இறக்குமதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் 50% கூடுதல் வரி விதித்ததற்கும், ஹெச்-1பி விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியதற்கும் பிறகு இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை. இந்தச் சந்திப்பில் "இருதரப்பு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள்" குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐ.நா.பொதுச்சபையின் 80-வது அமர்வின்போது நடைபெற்ற இந்த ஒரு மணி நேரச் சந்திப்பு "நேர்மறையாக" இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் அனைத்துப் பிரச்னைகளையும் வெளிப்படையாக விவாதித்தனர். "முன்னுரிமைப் பகுதிகளில்" முன்னேற்றம் காண்பதற்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
சந்திப்புக்குப் பின் X தளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், " நியூயார்க்கில் அமெரிக்கா வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியா அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் உரையாடல் இருதரப்பு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து இருந்தது. முன்னுரிமைப் பகுதிகளில் முன்னேற தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாங்கள் தொடர்பில் இருப்போம்" என்று தெரிவித்தார். இது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றமான பிரச்னைகள் குறித்துப் பேசப்பட்டதைக் குறிக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஜூலை மாதம் வாஷிங்டனில் நடந்த குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, இந்த இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை. கடந்த சில மாதங்களில் 2 நாடுகளுக்குமிடையே பல முக்கியப் பிரச்னைகள் எழுந்ததால், அவர்கள் விரிவாக விவாதிக்க வேண்டியிருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்கிடையே கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டிருந்த வர்த்தக ஒப்பந்தம் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது. இந்த அரசியல் ரீதியான சந்திப்பு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரீர் ஆகியோர் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களும் இந்த வாரம் அமெரிக்காவில் உள்ளனர். இந்தச் சந்திப்பானது, வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்களுக்கு ஒரு அரசியல் ரீதியிலான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
செப்டம்பர் 16-ம் தேதி, பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தகப் பதற்றத்திற்குப் பிறகு, மோடி-டிரம்புக்கு இடையே நடந்த முதல் உரையாடல் இது. இந்த உரையாடல் "நேர்மறையானது" என்று இரு தரப்பினரும் தெரிவித்தனர். உரையாடலுக்குப் பிறகு மோடியும் டிரம்பும் சமூக வலைதளங்களில், ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்துப் பேசியிருந்தனர். மோடி, இந்தியா-அமெரிக்கா கூட்டணியை "புதிய உயரத்திற்கு" கொண்டு செல்ல முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, ஜூன் 17-ஆம் தேதி நடந்த உரையாடலில், பாகிஸ்தானுடன் மோதல் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறியதை மோடி மறுத்திருந்தார்.
செப்.6-ம் தேதி, இரு நாடுகளுக்கும் இடையே "சிறப்பான உறவு" இருப்பதாகவும், "கவலைப்பட ஒன்றுமில்லை" என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மோடி, டிரம்பின் கருத்துகளை "ஆழமாகப் பாராட்டுகிறேன்" என்றும், "முழுமையாகப் பரஸ்பரம் ஒத்துழைப்பேன்" என்றும் கூறினார்.
இதையடுத்து, செப்.10-ம் தேதி, வர்த்தகப் பதற்றம் தணியக்கூடும் என்பதைக் குறிக்கும் விதமாக, இந்தியா மற்றும் அமெரிக்கா "வர்த்தகத் தடைகளை நீக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துகின்றன" என்றும், "இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதில் எந்தச் சிரமமும் இருக்காது" என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த மோடி, இரு நாடுகளும் "இயற்கையான கூட்டாளிகள்" என்றும், "பிரகாசமான, வளமான எதிர்காலத்திற்காக இணைந்து செயல்படுவோம்" என்றும் தெரிவித்தார்.
ஜெய்சங்கர் நியூயார்க் பயணத்தின்போது, பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் தெரேசா பி. லாசாரோ உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. பொது விவாதத்தில் ஜெய்சங்கர் உரை நிகழ்த்த உள்ளார். முன்னதாக, செப்.26-ஆம் தேதி மோடி உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால், தற்போதைய சூழல் காரணமாகத் திட்டம் மாற்றப்பட்டது.
டிரம்ப் செப்.23-ஆம் தேதி ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார். அவரது 2-வது பதவிக்காலத்தில் அவர் ஆற்றும் முதல் உரை என்பதால், டெல்லியில் உட்பட உலக நாடுகள் இந்த உரையை உன்னிப்பாகக் கவனிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.