சுபாஜித் ராய்
இரு நாடுகளுக்கிடையே பெருகி வரும் வர்த்தக சமமின்மை குறித்த டெல்லியின் கவலைகளை நிவர்த்தி செய்யும் விதமாக 'நிதியமைச்சர்களின் மட்டத்தில் ஒரு உயர் மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உரையாடல் நெறிமுறைப்படுத்தப்படும்' என்று நேற்று நடந்த உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும் கூட்டாக அறிவித்தனர்.
முட்களால் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதை இந்திய தரப்பு அழுத்தமாய் சொல்கிறது. வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, "ஜம்மு-காஷ்மீர் குறித்த பிரச்சனை எழுப்பப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை. சீன ஜனாதிபதி ஜீ , இம்ரான் கானின் வருகை குறித்து பிரதமரிடம் கூறினார், பிரதமர் மோடி அதைக் கவனமாய் கேட்டறிந்தார்" என்பதோடு தனது விளக்கத்தை முடித்துக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்ததிலிருந்து, பெய்ஜிங்குடனான உறவுகள் சற்று முரண்பாட்டான பாதையில் பயணித்தன . ஜம்முகாஷ்மீர் நடவடிக்கை குறித்து சீன அதிகாரிகளின் தொடர்ச்சியாக எதிர்மறையான அறிக்கைகள் விடுவதும், அதற்கு டெல்லி தரப்பிலிருந்து மறுப்பு பதிலை பதிவு செய்வது மட்டுமே இருநாட்டு உறவுகளின் இயல்பாய் இருந்தன.
நேற்று உயர்மட்டக் குழு அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக, மோடி செய்தியாளர்கிடம், "தத்தம் நாடுகளுக்கு உள்ள பிரச்சனைகளை உணர்வு பூர்வமாக அணுக விரும்பிகிறோம், இருக்கும் வேறுபாடுகளை விவேகத்துடன் நிர்வகிக்க முடிவு செய்துள்ளோம், வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாத வண்ணம் இருக்கும் மனநிலையைப் பெறுவோம்" என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்
மோடிக்குப் பிறகு பேசிய ஜீ , “கடந்த ஒரு வருடமாக, முறைசாரா உச்சிமாநாடு, தொடர்ந்து காணக்கூடிய முன்னேற்றத்தைத் தருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் ஆழ்ந்த மூலோபாய தொடர்பும், வரலாற்று ரீதியில் கலாச்சார பரிமாற்றங்களும் நடந்தேறிவருகிறது. மேலும், உலகளாவிய விஷயங்களுக்கு தீர்வு காண்பதில் ஒருமித்தக் கருத்தை நோக்கி நகர்கின்றோம்" என்றார்.
உங்கள் யோசனையில் உருவான இந்த வகையான முறைசாரா உச்சிமாநாட்டையும், அது தரும் மாற்றங்களையும் நான் உணர்கிறேன், அடுத்த ஆண்டில் எங்கள் நாட்டில் நடக்கவிருக்கும் மூன்றாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்கு உங்களை அழைக்கின்றேன்,வாருங்கள் ... என்று சீனா அதிபர் ஜீ ஜிங்பின் தெரிவித்தார்.
சீன அரசால் இயக்கப்படும் சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து கண்ணோட்டத்திலும் , அர்த்தத்திலும் சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும், நல்லுறவைப் பேணுபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். சீனாவின் டிராகனும், இந்தியாவின் யானையும் ஒன்றாய் நடனமாடுவதே இரு நாட்டு மக்களின் விருப்பம் " என்று சொல்லியிருந்தது.
'இருதரப்பு ஒத்துழைப்பின் ஒட்டுமொத்த நலன்களையும் நீர்த்துப்போக விடாமல், ஆங்காங்கே வரும் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும்' என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் சீன அதிபரின் பேச்சை சிறிதும் பிறழாமல் வெளியிட்டிருந்தது.
பரஸ்பர புரிந்துணர்வை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த மாமல்லபுரம் உச்சிமாநாட்டை கருத்தாக்கம் செய்தது. கடந்த ஆண்டு நிகழ்ந்த ‘வுஹான் ஸ்பிரிட்’ க்கு ஏற்ப மாமல்லபுர சந்திப்பை ‘சென்னை இணைப்பு’ என்று அழைத்தது. தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் இந்தியாவும் சீனாவும் நல் உறவின் ஆழத்தை அடிக்கோடிடும் விதமாக இந்த 'சென்னை இணைப்பு' உருவாக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் இரண்டரை மணி நேரம் ஜீ ஜிங்பின் மற்றும் மோடி, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்பான உரையாடல்களை மேற்கொண்டதாக சில அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் 'தி சண்டே எக்ஸ்பிரஸிடம்' தெரிவித்தன.
இரு நாடுகளுக்கான வர்த்தக பற்றாக்குறையை எவ்வாறு குறைப்பது? என்பதை சீனா முழுமையாக கருத்தில் கொள்கிறது என்றும், தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்தியாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற சீனா அதிபர் மனப்பூர்வமாக தயாராக இருக்கிறார் என்றும் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்
2018 ஆம் ஆண்டில், எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியா-சீனா வின் வர்த்தகம் 95.54 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. ஆனால், இதில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு வெறும் 18.84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமாகும்.
வெள்ளிக்கிழமை இரவு விருந்துக்குப் பிறகு, மீண்டும் இருத் தலைவர்கள் சனிக்கிழமை காலை சுமார் 90 நிமிடங்கள் சந்தித்தனர், அதைத் தொடர்ந்து தூதுக்குழு அளவிலான பேச்சுக்கள் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. மொத்தம் இரண்டு நாட்களில் ஏழு மணி நேரம் இரு தலைவர்களும் ஒன்றாக செயல்பட்டுள்ளனர். இதில் ஆறு மணி நேரம் பேச்சுவாத்தையில் கடந்தது.
பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது, நிதியுதவியை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற செயல்களுக்கு எதிரான கட்டமைப்பை வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்ற இருதலைவர்களின் பேச்சு, பாகிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட தகவலாய் உள்ளது.
பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இரு நாட்டு ராணுவத்திற்கும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை சீனா அதிபர் முன்னிலைப்படுத்தினர். இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு தனது நாட்டிற்கு வருகைத் தருமாறு சீன தரப்பு அழைப்பு விடுத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் (ஆப்கானிஸ்தான் பற்றிய பேச்சு இருந்தது ) தீர்வுகள் கான நெருக்கமான தொடர்பை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக கோகலே கூறினார். இந்தியா-சீனா உறவுகள் அதிகாரப்பூர்வ உறவுகளை ஏற்படுத்தி வரும் 2020- ல் 70 வது ஆண்டைத் தொடங்குகின்றன. இதை, இந்தியா-சீனா கலாச்சார மற்றும் மக்கள் பரிமாற்றங்களுக்கான ஆண்டாக நியமிக்க மோடியும் ஜீ ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூரின் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களால் நெய்யப்பட்ட , காஞ்சிவரம் புடவையை ஜின்பிங் மனைவி பெங் லியுவானுக்கும், தஞ்சாவூர் சரஸ்வதி தேவியின் ஓவியமும் , தங்கமுலாம் பூசப்பட்ட நாச்சியர்கோயில் குத்துவிளக்கும் , கையால் நெய்யப்பட்ட ஜின்பிங் உருவம் கொண்ட பட்டையும் நரேந்திர மோடி நேற்று நினைவுப் பரிசாக அளித்தார் என்பது குறிபிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.