உலக அமைதி தினம் : நம் கண் முன்னே எங்கும் பரவி இருக்கிறது ஒரு போரை உருவாக்குவதற்கான காரணிகள். பதட்டமான சூழலின் மத்தியில் அமைதி என்ற வார்த்தையை நாம் பல்வேறு விதங்களில் தொலைத்திருக்கிறோம். தொலைத்துக் கொண்டும் இருக்கிறோம்.
போர்கள் ஒவ்வொரு மனிதனின் மனதையும், ஒவ்வொரு நிலத்தின் தன்மையையும் குருதியோடு பிணைத்துப் போட்டு வன்முறைகளாலும் வெறுப்புகளாலும் கட்டுண்டு கிடக்கிறது. அமைதி. அதைத்தான் நாம் அனைவரும் தேடுகிறோம்.
பலதரப்பட்ட இனங்களையும், இறை நம்பிக்கைகளையும், மதக் கோட்பாடுகளையும், பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வெள்ளைப் புறாக்களுக்கான தேவைகளும், வெள்ளைப் பூக்களின் மணத்திற்கான தேவைகளும் அதிகமாய் தான் தேவைப்படுகிறது.
உலக அமைதி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டே உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதி என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் இருந்தது என்றால் அது மிகையாகது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உலக நாடுகள் அனைத்தையும் அமைதியற்றதாக நிம்மதியற்றதாக மாற்றியது. உலக நாடுகள் மத்தியில் மீண்டும் இப்படியான போர்கள் மீண்டும் வராமல் இருக்க ஐக்கிய நாடுகளின் சபை 1945ல் உருவாக்கப்பட்டது.
இந்த நாடுகளின் சபை உலக நாடுகளின் மத்தியில் நிலவும் பதட்டமான சூழல்களை சரி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் 1945ற்கு பிறகு பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வந்தது. புதிது புதிதாக நாடுகள் உருவாக ஐக்கிய நாடுகளின் சபையின் பொறுப்புகள் அதிகரிக்க துவங்கியது.
1961ம் ஆண்டும் ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரின் இறப்பை நினைவு கூறும் விதமாக செப்டம்பர் மூன்றாவது வாரம் வரும் செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் என்று கடைபிடித்து வந்தது.
பின்னர் 2002ம் ஆண்டு உலக அமைதி தினம் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2002ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினம் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கடைபிடித்து வருகிறது.
அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 137வது இடத்தினை பிடித்திருக்கிறது.
ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது.
சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், ஈராக், மற்றும் சோமாலியா நாடுகள் கடைசி ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது. கடந்த வருடம் இந்தியா 141வது இடத்தினைப் பிடித்திருந்தது. வன்முறை மற்றும் கலவரங்களுக்கு எதிராக இந்தியா எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
2016ம் ஆண்டில் இருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் மத்தியிலான உறவு முறை சரியாக இல்லாததன் காரணத்தால் தொடர்ந்து கீழ் இடங்களைப் பிடித்திருக்கிறது இந்தியா என சிட்னி நகரத்தில் இருந்து இந்த கருத்துக் கணிப்பினை வெளியிட்ட இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் மற்றும் பீஸ் (Institute of Economics and Peace (IEP)) அமைப்பு அறிவித்துள்ளது.