Shubhajit Roy
India-US ties about democratic values: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவானது வலுவாகவும், நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்உம் என்பதை கோடிட்டு காட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இரு நாட்டு உறவானது ஜனநாயக மதிப்புகள் மற்றும் பன்முகத்தன்மைக்கான கூட்டு அர்ப்பணிப்பு தொடர்பானது என்று கூறினார்.
அடுத்த வாரம் வர இருக்கும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை மேற்கோள் காட்டிய பைடன் முன் எப்போதைக் காட்டிலும் காந்தி கூறிய அகிம்சை, மரியாதை, சகிப்புத்தன்மை இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறினார்.
ஓவல் அலுவலகத்தின் பைடனுக்கு பிறகு பேசிய மோடி, அடுத்த தசாப்தம் இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஒரு மாற்றத்தக்க காலம் என்று கூறினார், மேலும் "இரு நாடுகளும் அர்ப்பணித்துள்ள ஜனநாயக மதிப்புகள், மரபுகள் இவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு இருநாட்டு தலைவர்களும் முதன்முறையாக தற்போது தான் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் இதற்கு முன்பு வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று முறை அலைபேசியில் பேசியுள்ளனர். மூன்று ஆன்லைன் மாநாடுகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானின் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நடந்த முதல் குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிலும் அவர்கள் பங்கேற்றனர்.
மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது பைடன் கோவிட் தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் குவாட் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட மூன்று விவகாரங்கள் தொடர்பாக வலியுறுத்தினார். பாரம்பரியம், திறமை, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் அறங்காவலர் (tradition, talent, technology, trade and trusteeship (five Ts)) பற்றி மோடி பேசினார். அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் பேசினார்கள், பின்னர் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது முழு உலகிற்கும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நிச்சயமாக எங்கள் கூட்டாண்மை நாங்கள் செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் மிகவும் அதிகமானது. இது நாம் யார் என்பதை காட்டுகிறது. ஜனநாயக மதிப்புகள், பன்முகத்தன்மைக்கான நம்முடைய பங்களிப்புகள் மற்றும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை வலுப்படுத்தும் நான்கு மில்லியன் இந்திய அமெரிக்கர்கள் உட்பட குடும்ப உறவுகளைப் பற்றியது தான் நம்முடைய பகிரப்பட்ட பொறுப்புகள் என்று கூறினார் ஜோ பைடன்.
அடுத்த வாரம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை உலகம் கொண்டாடுகிறது. அகிம்சை, மரியாதை, சகிப்புத்தன்மை பற்றிய அவரது செய்தி இன்றும் முக்கியமானது என்பது நமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
பைடனுடன் ஒரு சிறந்த சந்திப்பு என்றும், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் அவரது தலைமை பாராட்டுக்குரியது. இந்தியா மற்றும் அமெரிக்கா எவ்வாறு பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் மற்றும் கோவிட் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய சவால்களை சமாளிக்க ஒன்றாக வேலை செய்வது பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் சந்திப்பிற்கு பிறகு மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியா-அமெரிக்க உறவுகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்குகிறோம் என்று குறிப்பிட்ட பைடன், நாங்கள் ஒன்றாக எதிர்கொள்ளும் சில கடினமான சவால்களை சந்தித்து வருகின்றோம் என்றும் கூறினார்.
கோவிட் மற்றும் காலநிலை மாற்றம் தவிர்த்து இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி பேசுவோம் என்றும் அவர் கூறினார்.
உங்கள் தலைமையில் இந்திய-அமெரிக்க உறவுகள் விரிவடைவதற்கு விதைகள் விதைக்கப்பட்டிருப்பதை நான் காண்கிறேன், உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும், இது ஒரு மாற்றத்தக்க காலமாக இருக்கும் . நான் அதை மிகத் தெளிவாகப் பார்க்கிறேன் என்று இரு தரப்பு உறவுகளின் 10 ஆண்டுகால வளர்ச்சி குறித்து மோடி தெரிவித்தார்.
ஜனநாயக மரபுகள் பற்றி பேசிய போது மோடி திறமை குறித்தும் உரையாடினார். 4 மில்லியன் அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கான பயணத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த தசாப்தத்தின் முக்கியத்துவத்தையும், இந்திய அமெரிக்கர்களின் இந்த திறமையால் நான் வகிக்கப்போகும் பாத்திரத்தையும் பார்க்கும் போது, மக்களிடம் இருந்து திறமைகள் அதிக பங்கு வகிப்பதையும், இந்திய திறமை இதில் முழு பங்காளியாக இருப்பதையும் காண்கிறேன் என்று மோடி கூறினார்.
இன்று உலகின் மிக முக்கியமான உந்து சக்தியாக தொழில்நுட்பம் மற்றும் மனிதகுலத்தின் பயன்பாட்டுக்காக தொழில்நுட்பம் சேவை இருக்கும். இதற்கான வாய்ப்புகள் மிகப்பெரியதாக இருப்பதை நான் காண்கிறேன் என தொழில்நுட்பம் குறித்தும் மோடி பேசினார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சவாலாக இருந்த வர்த்தகப் பிரச்சினை குறித்தும் மோடி பேசினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், வர்த்தகம் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது, மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் உண்மையில் காம்ப்ளிமெண்ட்ரியாக இருப்பதை காண்கிறோம். உங்களிடமும் விசயங்கள் உள்ளன. எங்களிடமும் விசயங்கள் உள்ளன. நம்மிருவரிடமும் இருக்கும் விசயங்களுக்கும் குறைவில்லை. எனவே நாம் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்கிறோம். இந்த தசாப்தத்தில் வர்த்தகப் பகுதியும் மிக முக்கியமானதாக இருப்பதை நான் காண்கிறேன் என்றார் அவர்
அக்டோபர் இரண்டாம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். மகாத்மா காந்தி எப்போதும் இந்த பூமியின் அறங்காவலர். அவர் அறங்காவலர் கொள்கையைப் பற்றி பேசுவார். இதன் பொருள், நம்மிடம் உள்ள புவியை, நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்று காலநிலை மாற்றம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸின் இந்திய வம்சாவளி குறித்தும் அவருடைய தாயார் ஒரு விஞ்ஞானியாக இருந்தது குறித்தும் குறிப்பிட்டார். அதே நேரத்தில் பைடனின் மூதாதையர்கள் குறித்து இந்தியாவில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கொண்டு வந்ததாகவும் மோடி தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சிறப்பு ஜனாதிபதி காலநிலை தூதர் ஜான் கெர்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய தரப்பில் இருந்து, மோடியுடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உலகளாவிய விநியோகத்தை அதிகரிக்க இந்தியாவில் கூடுதலாக 1 பில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று பைடன் தெரிவித்தார். நேர்மறையான சிந்தனை மற்றும் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேற முடிவு செய்துள்ளதாக குவாட் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.