தவறான வழக்கில் 43 ஆண்டுகள் சிறை; விடுதலைக்கு பின் அமெரிக்காவில் நாடு கடத்தலை எதிர்கொள்ளும் இந்திய வம்சாவளி

பென்சில்வேனியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமண்யம் "சுபு" வேதம் (64), தான் செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், அக்.3 அன்று விடுதலையான உடனேயே, அமெரிக்க குடியேற்ற சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) அவர் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.

பென்சில்வேனியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமண்யம் "சுபு" வேதம் (64), தான் செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், அக்.3 அன்று விடுதலையான உடனேயே, அமெரிக்க குடியேற்ற சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) அவர் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Subu Vedam

கற்பனை செய்து பாருங்க, 43 ஆண்டுகளைச் சிறையில் கழித்து, நீங்க செய்யாத குற்றத்திற்காக நிரபராதி என்று நிரூபணமாகி, சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகிறீர்கள்... ஆனால், சிறை வாசலில் இருந்து மீண்டும் சட்டத்தின் பிடியில் சிக்குவது எவ்வளவு பெரிய சோகம். அப்படி ஒரு அதிர்ச்சிதான் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்ரமண்யம் "சுபு" வேதம் என்பவருக்கு நடந்துள்ளது.

Advertisment

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மனிதரான சுப்ரமண்யம் “சுபு” வேதம் கொலைக் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாதத் தொடக்கத்தில் சிறையில் இருந்து விடுதலையானார். ஆனால், 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் பல தசாப்தங்கள் பழமையான நாடு கடத்தல் உத்தரவின் (deportation order) காரணமாக, அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE - Immigration and Customs Enforcement) உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

64 வயதான சுபு வேதம், தான் செய்யாத கொலைக் குற்றத்திற்காக 4 தசாப்தங்களுக்கும் மேலாக சிறைக்குப் பின்னால் இருந்த நிலையில், அக்.3 அன்று பென்சில்வேனியாவின் ஹண்டிங்டன் மாநிலச் சீர்திருத்த நிறுவனத்தில் (Huntingdon State Correctional Institution) இருந்து வெளியே வந்தார். எனினும், சுபுவேதம் நீண்ட கால சுதந்திரப் போராட்டம் இன்னும் முடியவில்லை. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) பழைய உத்தரவு, தற்போது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தப் போவதாக அச்சுறுத்துகிறது.

சுபு வேதத்தின் சட்டச் சிக்கல் 1982-ல் தொடங்கியது. அப்போது, சென்டர் கவுண்டியில் (19 வயதான) அவரது நண்பர் தாமஸ் கின்சரை (Thomas Kinser) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சுபு, 0.25 காலிபர் பிஸ்டலால் கின்சர சுட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், துப்பாக்கி ஒருபோதும் மீட்கப்படவில்லை. மேலும், வழக்கு முழுவதும் சூழ்நிலை ஆதாரங்களின் (circumstantial evidence) அடிப்படையில் அமைந்திருந்தது. இந்த வழக்கில் 1983-இல் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வேதம், பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் பிறந்த சுபு, 9 மாதக்குழந்தையாக இருந்தபோது அமெரிக்காவுக்கு வந்தார். அவரது நண்பரின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பிறகு, அடுத்த 43 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்தார்.

Advertisment
Advertisements

2022-ல், சுபுவின் சட்டப் பாதுகாப்புக் குழுவில் இணைந்த பென்சில்வேனியா இன்நோசென்ஸ் திட்டக் (Pennsylvania Innocence Project) குழுவினர், சென்டர் கவுண்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கோப்புகளில் வெளியிடப்படாத சில ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர். அதில், கின்சரின் மண்டையோட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டா 0.25 காலிபர் தோட்டா சுடுவதற்கு மிகவும் சிறியது என்று கூறும் எஃப்.பி.ஐ. அறிக்கை மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் அடங்கும்.

2025 செப்டம்பரில், மாவட்ட அரசு வழக்கறிஞர் பெர்னி கான்டோரினா (Bernie Cantorna), சுபு வேதம் மீதான கொலை குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தார். மேலும், மறு விசாரணை என்பது நியாயமற்றது மற்றும் சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். அதன் பிறகு, பென்சில்வேனியாவின் வரலாற்றிலேயே நீண்ட காலம் சிறையில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவர் (longest-serving exoneree) என்ற பெருமையுடன், சுபு அக்.3 அன்று சிறையில் இருந்து சுதந்திரமாக வெளியே வந்தார்.

ஆனால், சுபுவின் சுதந்திரம் சில நிமிடங்களே நீடித்தது. சிறை வாசலில் காத்திருந்த அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினர் (ICE), அவரை உடனடியாகக் காவலில் எடுத்தனர். இதற்குக் காரணம், பல தசாப்தங்கள் பழமையான ஒரு நாடு கடத்தல் உத்தரவு. 1980-களில் அவர் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பு, சுபு 19 வயதில் போதைப்பொருள் விநியோகிக்கும் நோக்குடன் (LSD) ஒரு குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். ஆயுள் தண்டனையில் இருந்ததால், இந்த பழைய உத்தரவு குறித்து ICE இத்தனை காலம் கண்டுகொள்ளவில்லை. இப்போது, கொலை வழக்கில் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட உடனேயே, அந்தக் காலாவதியான நாடு கடத்தல் உத்தரவை ICE அமைப்பு மீண்டும் தூசி தட்டி செயல்படுத்தியுள்ளது. 

Us America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: