அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் நாட்டில் இருந்து தாமாகவே வெளியேறி உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின்படி, “ரஞ்சனி சீனிவாசன் பயங்கரவாத அமைப்பான ஹமாஸை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.மார்ச் 5 அன்று வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது . மார்ச் 11 அன்று தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியதாக வீடியோ காட்சிகளை பகிர்ந்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முன்னர், நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நடவடிக்கை என்பது அமெரிக்க ராணுவ விமானத்தில் விலங்கிடப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அபாயத்தைத் தவிர்க்கிறது.ரஞ்சனி சீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவராவார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், எக்ஸ் பதிவில் விமான நிலையத்தில் ரஞ்சனியின் வீடியோவை காணொளியை வெளியிட்டு, “வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் நாட்டில் இருக்கக்கூடாது. அமெரிக்காவில் வாழவும் படிக்கவும் விசா வழங்கப்படுவது ஒரு பாக்கியம். நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது. கொலம்பியா பல்கலைக்கழக பயங்கரவாத ஆதரவாளர்களில் ஒருவர் சுயமாக நாட்டை விடு வெளியேறுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று கூறினார்.
மேலும், அமெரிக்காவில் வசிக்கவும் படிக்கவும் விசா வழங்கப்படுவது என்பது ஒரு சிறப்புரிமை. ஆனால் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகையை ரத்து செய்ய அமெரிக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர் போராட்டங்களின் களமாக கொலம்பியா பல்கலைக்கழகம் இருந்து வந்தது. கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் கொலம்பியா பல்கலை மாணவர் மஹ்மூத் கலீல் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.