/tamil-ie/media/media_files/uploads/2018/11/d674-1.jpg)
இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை! இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கடந்த மாதம் 26 ஆம் தேதி, ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டார். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி சிறிசேனா அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் எதிரொலியாக அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. அதேசமயம், தான்தான் பிரதமர் என்ற அறிவித்த ரணில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்தும் வெளியேற மறுத்தார்.
ரணிலை பிரதமராக அங்கீகரித்த அந்நாட்டு சபாநாயகர் கரு. ஜெயசூரியா, வரும் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும், அன்றைய தினம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளான, யு.என்.பி., தமிழ் தேசிய கூட்டணி, ஜே.வி.பி., எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 10 கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கின் மீது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவ.19ம் தேதி வரை இந்த கலைப்புக்கு தடை விதித்துள்ளது. அதேபோல, ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தடை, இலங்கை நாடாளுமன்றம் நவம்பர்14ம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கு தடை இல்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.