அமெரிக்கா படைகள் வெளியேறுவதுதான் தீர்வு - ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி

ஈரான்: அமெரிக்கப் படைகளையும் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதே காசெம் சுலேமானீயின் படுகொலைக்கான எங்கள் இறுதி பதிலாக இருக்கும்

கடந்த வாரம் ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா- ஈரான் இடையே பதட்டங்கள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், இன்று அதிகாலை ஏவுகணைகள் மூலம் ஈராக்கில் இரண்டு அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியது.


ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக டொனால்ட் டிரம்ப்: ஈராக்கில் அதன் விமான தளங்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில்,”நடந்தது எல்லாம் நன்மைக்கே !  ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு இராணுவ தளங்களில் ஏவுகணைகள் ஏவப்பட்டன. விபத்துக்கள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுவருகிறது. இதுவரை, மிகவும் நல்லது” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையை புதன்கிழமை காலை (அமெரிக்கா நேரப்படி ) வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

உக்ரைன் விமானம் ஈரானில் விபத்து,170 பயணிகள் பலி: 

 இன்று தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.  இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகள் பலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் 82 ஈரானிய பிரஜைகளும், 63 கனேடிய பிரஜைகளும் பலியானதாக முதற்கட்ட அறிவிக்கை தெரிவித்துள்ளது.  மேலும், விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது

பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவோம்:  

ஜெனரல் காசெம் சுலேமானீ ஐ.எஸ்.ஐ.எஸ், அல் நுஸ்ரா, அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு எதிராக வீரமாக போராடினார். அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஐரோப்பிய தலைநகரங்கள் இப்போது பெரும் ஆபத்தில் இருக்கும்.

மேலும்,  அனைத்து அமெரிக்கப் படைகளையும் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதே அவரது படுகொலைக்கான எங்கள் இறுதி பதிலாக இருக்கும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார்.  

பதிலடித் தாக்குதலுக்கு பின்பு தான் காசெம் சுலேமானீ அடக்கம் செய்யப்பட்டார். 

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஈரானிய அரசு தொலைக்காட்சி காசெம் சுலேமானீ அடக்கம் செய்ப்பட்ட காட்சிகளைக் காட்டியது. அப்போது ஒலிபெருக்கிகளின் மூலம் அமெரிக்கா தளங்கள் தாக்கப்பட்டது என்று  அறிவிக்கப்பட்டபோது நூற்றுக்கணக்கான மக்கள் கூடி “கடவுள் மிகப் பெரியவர்” என்று கோஷமிடத் தொடங்கினர். “அவரது பழிவாங்கல் எடுக்கப்பட்டது, அவரால் நிம்மதியாக இப்போது ஓய்வெடுக்க முடியும்” என்று தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தற்காப்பு விகிதாசாரத்திற்குள் எடுத்த முடிவு :

ஈரான் வெளியுறவு மந்திரி ஜவாத் ஸரீஃப் புதன்கிழமை தனது  ட்வீட்டில் , “ஐ.நா. சாசனத்தின் 51 வது பிரிவின் கீழ் தற்காப்புக்கான விகிதாசார நடவடிக்கைகளை ஈரான் எடுத்தது. அந்த அமெரிக்க தளங்கள் இருந்துதான் ஈரானிய குடிமக்களும், மூத்த அதிகாரிகளும் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்  நடைப்பெற்றது.

நாங்கள் போரை நாடுவதில்லை, ஆனால் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக எங்களை தற்காத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்

ஈராக் நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்கவும்: இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை : 

ஈராக் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுருத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலையடுத்து, வெளிவிவகார அமைச்சகம் இன்று இந்த  பயண ஆலோசனையை வெளியிட்டது. அடுத்த அறிவிப்பு வரும் வரை ஈராக்கிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. பாக்தாத், எர்பில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்குவதற்காக தொடர்ந்து செயல்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்: 

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன்  இது குறித்து கூறுகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செயல்பாடுகள் ஈரானுடனான பதட்டங்களை அதிகரித்து  போரின் விளிம்பில் நிறுத்துகின்றது என்றும் காசெம் சுலேமானீ கொலை தொடர்பாக அமெரிக்கா காங்கிரஸுக்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டார் . இது அமெரிக்கா அதிபரின் தகுதியற்ற தலைமையை நிரூபிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

ஈராக் அதிபரின் கருத்து:  

தற்போதைய அமெரிக்க-ஈரான் பதட்டங்களை ‘ஆபத்தான நெருக்கடி’ என்று ஈராக்கின் பிரதமர் ஆதில் அப்துல்-மஹ்தி கூறியுள்ளார்.  உலகில் “பேரழிவு தரும் முழுமையான போரை” அச்சுறுத்துவதாகக் கூறினார்.

ஈராக் தனது நாட்டின் இறையாண்மை மீறுவதாகவும்,  இதுபோன்ற தாக்குதல்களை நிராகரிப்பதாகவும் என்று கூறினார். இந்த பதட்ட சூழலில், அனைவரும் சுய கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், அசாயிப் அஹ்ல் அல்-ஹக் (ஈரான் இஸ்லாமிய புரட்ச்சிப் படை ஆதரவு பெற்ற) அமைப்பின் தளபது கைஸ் அல்-கசாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், காசெம் சுலேமானீ கொலைக்கு ஈரான் தனது ஆரம்ப பதிலை கொடுத்திருக்கிறது,   இப்போது ஈராக்கும் தனது பதிலை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறினார்.  மேலும், ஈராக்கின் பதில்,  ஈரானை விட குறைவாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

கைஸ் அல்-கசாலி உலகளாவிய தீவிரவாதி என்று அமெரிக்கா ஜனவரி மூன்றாம் தேதி அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close