இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், இஸ்லாமியர்களிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாகக்கூடும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை தினத்தில், இலங்கையின் சர்ச்சுகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு, உள்ளூர் முஸ்லீம் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையானது.
இந்நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேன பேசியதாவது, இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், இஸ்லாமியர்களில் இருந்து ஒரு பிரபாகரன் உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தி, கொழும்பு கெஜட் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தற்போது மதரீதியாக பிளவுபட்டு கிடக்கிறது.மக்கள் மத்தியில், மதரீதியிலான பிளவு தொடர்ந்தால், மற்றுமொரு உள்நாட்டுப்போர் உருவாகக்கூடும். அவ்வாறு நடந்தால் அதில் தோற்கப்போவது ஒட்டுமொத்த தேசமும் தான் என்று சிறிசேன கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.