இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் இஸ்மாயில் ஹனியே தலைமையிலான ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக காசாவிற்கு கடத்தி செல்லப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Israel carries out airstrikes in Lebanon, Hezbollah hits back
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர்கள் உள்பட குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் கொல்லப்படுவர் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, லெபனானுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்களை அனுப்பி தாக்குதல் தொடுத்து வருகிறது.
"இஸ்ரேல் எல்லையை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தயாராகி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டிஎஃப்) அடையாளம் கண்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, ஐ.டிஎஃப் லெபனானில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைக்கிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் ஹிஸ்புல்லா மீதான அதன் தற்போதைய தாக்குதல்களில் பெரும்பாலானவை தெற்கு லெபனானில் குவிந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டால், அங்கும் தாக்குதல் நீட்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அவசரகால பிரகடன நிலையை அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இதனிடையே, காசாவில் போர்நிறுத்தத்தை உறுதிசெய்வதற்கும், பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அதன் தூதுக்குழுவை அனுப்பியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையில் நேரடியாக பங்கேற்பதை நிராகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“