/indian-express-tamil/media/media_files/2025/10/13/gaza-2025-10-13-11-23-23.jpg)
அமெரிக்காவின் ஆதரவுடன் ஹமாஸுடன் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம், காசாவில் ஹமாஸின் பிடியில் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளும் இன்று (அக்டோபர் 13) விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. அதேசமயம், இஸ்ரேலின் சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியக் கைதிகளின் விடுதலையையும் பாலஸ்தீனியர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
மேலும், இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விளைவாக, பஞ்சத்தால் வாடும் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார், துருக்கி உள்ளிட்ட மத்தியஸ்தர்களுடன் எகிப்தில் மறைமுகமாக நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தை இஸ்ரேலும் ஹமாஸும் கடந்த வாரம் ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இஸ்ரேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகையின் தகவலின்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிணைக்கைதிகளின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசுவார் என்றும், இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றுவார் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, ட்ரம்ப் எகிப்துக்குப் புறப்படுவார். அங்கு, பிராந்திய மற்றும் சர்வதேசத் தலைவர்களுடன் இணைந்து உலகளாவிய "அமைதி உச்சி மாநாட்டிற்கு" இணைத் தலைமை தாங்க உள்ளார். இந்த மாநாடு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைக் குறிக்கும் வகையிலும், பிராந்தியத்தில் நீண்ட கால அமைதிக்கு வலியுறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திடப்பட்ட பின்னர், இஸ்ரேலியப் படைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட "மஞ்சள் கோட்டுக்கு" (yellow line) காசா நகரிலிருந்து பின்வாங்கின. இது லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு வழி வகுத்தது. ஆனால், காசாவில் உள்ள பெரும்பாலான வீடுகள் தூசி படிந்த இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன. இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கிய பகுதிகளில், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் காசா நகரிலும் தெற்கு காசாவிலும் தெருக்களில் ரோந்து செல்வதையும், உதவிப் பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிணைக்கைதிகள் மற்றும் கைதிகளின் விடுதலை மற்றும் பரிமாற்றத்தைச் சுலபமாக்கும் ஒரு பல-கட்ட நடவடிக்கையை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கியுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகளில், முதல் 7 பேரைச் செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) பெற்றுக்கொண்டதாகவும், இதனை இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய ஓர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவிலிருந்து விடுவிக்கப்பட உள்ள 20 பிணைக்கைதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியை எழுதியுள்ளனர். "இஸ்ரேல் மக்கள் அனைவரின் சார்பாகவும், மீண்டும் வருக, என்று நெதன்யாகு அதில் எழுதினார். உங்களுக்காக நாங்கள் காத்திருந்தோம், உங்களை வரவேற்கிறோம். சாரா மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.