அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதன்கிழமை இஸ்ரேலுக்கு வருகை தருகிறார் என்றும், தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்பதை தெளிவுபடுத்துவார், என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
நெதன்யாகுவுடன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுடனான ஒற்றுமையை பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று பிளிங்கன் கூறினார்.
நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கொடிய நாளில், அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் போராளிகள் வெடித்து 1,300 பேரை முக்கியமாக பொதுமக்களைக் கொன்றதை அடுத்து, காஸாவை ஆளும் ஹமாஸ் இயக்கத்தை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் சபதம் எடுத்துள்ளது.
"ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை பிடன் தெளிவுபடுத்துவார் " என்று டெல் அவிவில், இஸ்ரேலின் போர் அமைச்சரவையுடன் பல மணிநேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு பிலின்கன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, சைரன்கள் ஒலித்ததால் அவர் ஐந்து நிமிடங்களுக்கு பதுங்கு குழியில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இஸ்ரேலின் போர் நோக்கங்கள் மற்றும் மூலோபாயம் மற்றும் "பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்கும் வகையிலும், ஹமாஸுக்குப் பயனளிக்காத வகையில் காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதற்கும்" அது எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது குறித்து பைடனுக்கு இஸ்ரேல் விளக்கமளிக்கும்.
நன்கொடை நாடுகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளின் மனிதாபிமான உதவிகளை காசாவில் உள்ள பொதுமக்களை அடைய உதவும் திட்டத்தை உருவாக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன, என்று அவர் கூறினார்.
காசாவில் 2,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள், 10,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.
‘காசாவில் சியோனிச ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க எதிர்ப்புத் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் … அனைத்து விருப்பங்களும் திறந்திருக்கும், காசா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி நாங்கள் அலட்சியமாக இருக்க முடியாது’, என்று ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
எதிர்ப்பு முன்னணியானது, எதிரியுடன் (இஸ்ரேல்) நீண்டகாலப் போரை நடத்தும் திறன் கொண்டது... வரவிருக்கும் நேரங்களில், எதிர்ப்பு முன்னணியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் எதிர்பார்க்கலாம், என்று அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான பிராந்திய நாடுகளையும் சக்திகளையும் ஈரான் "எதிர்ப்பு முன்னணி" என்று குறிப்பிடுகிறது.
இது லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்த இயக்கம், நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், கடந்த ஆண்டுகளில் சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளவும் பிராந்தியம் முழுவதும் உருவாக்கப்பட்டது, என்று அமிரப்துல்லாஹியன் மேலும் கூறினார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் தெஹ்ரானுக்கு தொடர்பில்லை. இது இஸ்ரேலின் "சீர்செய்ய முடியாத" இராணுவ மற்றும் உளவுத்துறை தோல்வி என்று ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி திங்களன்று, தெஹ்ரான் பாலஸ்தீன கோரிக்கையை ஆதரித்த போது, இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு முன்னணி அதன் சொந்த சுயாதீன முடிவுகளை எடுத்தது என்று கூறினார்.
Read in English: Israel-Hamas War: US President Joe Biden to visit Israel tomorrow, hold talks with Benjamin Netanyahu; Iran issues warning
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“