புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மஸூத் அஸாரின் மகன், சகோதரர் உட்பட 44 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் ஷேர்யர் கான் இதனைத் தெரிவித்தார். ”புல்வாமா தாக்குதல் குறித்த விபரங்களை கடந்த வாரம் இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்தது.
அதன்படி மஸூத் அஸாரின் மகன், சகோதரர் உட்பட 44 பேர் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து 2 வாரங்களுக்கு நடைப்பெறும். அவர்களுக்கு எதிராகக் கிளம்பும் புகாரின் அடிப்படையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கைது செய்யப்பட்டதற்கு எந்த நெருக்கடியும் காரணமல்ல. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எதிராக, மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கை தான் இது.
எந்த நாட்டின் மீதும் பயங்கரவாதத்தை ஏவ, பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்” என்றார்.