பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக செப்.23 ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று அதிபர் ஜோ பைடனை முதன்முறையாக நேரில் சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் இந்திய அமெரிக்க உறவு வலுப்படுத்துவது உட்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
இந்தியாவில் 5 பைடன்கள்
அதற்கு முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்ற ஜோ பைடன், இந்தியாவுடனான தனது தொடர்புக்கான சாத்தியம் குறித்து மோடியிடம் பேசத் தொடங்கியதும் சிரிப்பலை ஏற்பட்டது.
அப்போது பேசிய ஜோ பைடன், "நான் 1972 ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மும்பையில் இருந்து பைடன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அதை நான் அப்படியே விட்டுவிட்டேன். தொடர்ந்து, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் கடிதம் வந்த கதையைக் கூறி, இந்தியாவில் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா என கேட்டேன். அடுத்த நாள், இந்திய பத்திரிக்கைகள், இந்தியாவில் ஐந்து பைடன்கள் இருப்பதாக செய்தி வெளியிட்டன.
ஆனால், அதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் கேப்டன் ஒருவர் இருந்ததை கண்டுபிடித்தேன்" என்றார்.
அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியைக் குறிப்பிடுவதாகத் தெரிந்தது. அந்நிறுவனம் பல நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வர்த்தகத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய பைடன், அவர் ஒரு அயர்லாந்து காரர் என்பதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால், அவர் (ஜார்ஜ் பைடன்) இந்தியாவில் தங்கியிருந்து ஒரு இந்தியப் பெண்ணை மணந்தார். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள், என்பதை இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.
குடும்ப பூர்வீகத்தை நினைவுகூர்ந்த பைடன், ஒற்றை ஜோக்கில் அவையில் சிரிப்பலையில் மூழ்கடித்தார். அவர்களை கண்டுபிடிக்க எனக்கு உதவுவதற்காகத் தான், மோடி அமெரிக்கா வந்துள்ளார் என தெரிவித்தார்.
கிண்டலடித்த மோடி
அதே சமயம், பிரதமர் மோடியும் கிண்டலாக, "இந்தியாவில் உங்களின் குடும்ப பெயர் இருப்பது குறித்து நீங்கள் ஏற்கனவே என்னிடம் விரிவாக கூறியிருக்கிறீர்கள். இது குறித்த ஆவணங்களைத் தேடினேன். வேட்டையின் பலனாக சில ஆவணங்கள் உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன். இவை உங்களுக்கு உதவலாம்" என தெரிவித்தார்.
இரண்டு தலைவர்களின் பேச்சு, அவையில் இருந்தவர்களை மேலும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. எப்படியிருந்தாலும், 46ஆவது அமெரிக்க அதிபருக்கு இந்தியாவுடன் குடும்ப தொடர்புகள் இருப்பதை பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதே உண்மை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.