ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத்தை CTD எனப்படும் பாகிஸ்தானின் Counter Terrorism Department கைது செய்திருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் GEO நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது. பாகிஸ்தானில் சுதந்திரமாக வசித்து வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
பாகிஸ்தானில் ஹபீஸ் சையது புதிதாக அரசியல் கட்சி கூட தொடங்கினார். ஆனால், பாகிஸ்தான் அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. ஹபீஸை சர்வதேச தீவிரவாதியாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் GEO சேனல் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், லாகூரில் இருந்து குஜ்ரன் வாலா எனும் பகுதிக்கு சயீத் பயணம் செய்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்பிறகு, செய்தியாளர் சந்திப்பில் இந்த கைது நடவடிக்கை செய்தியை CTD உறுதி செய்ய, JuD அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் சயீத் கைது செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் தொடர் வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது, பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் அவர் தற்போது செய்யப்பட்டிருக்கிறார்.