Pakistan's first woman Supreme Court judge : லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் ஆயிஷா மாலிக் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உயர்மட்ட குழு. இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது பாகிஸ்தான் சட்ட கமிஷன். எனவே இவர் பாகிஸ்தானின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையில் செயல்பட்டு வரும் சட்ட கமிஷன் ஆயிஷாவின் பதவி உயர்வு குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இதில் ஐந்து பேர் ஆதரவாகவும், நான்கு பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் அவரின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது சட்ட கமிஷன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உருவானதிலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்க சட்ட கமிஷன் ஒப்புதல் வழங்கி இருப்பது இதுவே முதன்முறையாகும். இந்த ஒப்புதல் நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே இறுதி முடிவு எட்டப்படும். ஏற்கனவே ஆயிஷாவின் பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவரை தேர்வு செய்வதற்கு சாதகமான சூழல்கள் சட்ட கமிஷனின் வாக்கு முடிவுகள் உருவாக்கவில்லை.
நாட்டில் உள்ள ஐந்து உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளைக் காட்டிலும் இவர் வயதில் மிகவும் குறையவர் என்பதால் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் அப்துல் லத்தீஃப் அஃப்ரிடி கூறியுள்ளார். அவரின் பெயர் பரிந்துரையில் உறுதியாக இருந்தால் சட்ட கமிஷனை புறக்கணிக்க இருப்பதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். சீனியாரிட்டி அடிப்படையில் பார்க்கும் போது அவர் லாகூர் நீதிமன்றத்தில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரின் பதவி உயர்வு உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2031 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக செயல்படுவார். மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் அவர் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும் சாத்தியம் அதிகரிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil