கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை: நேபாளத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் சாலை, விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 இந்தியர்கள் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளனர்.
கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு, 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் யாத்திரை மேற்கொண்டனர். அங்கு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் யாத்திரை மேற்கொண்ட அனைவரும், நேபாளத்தில் உள்ள அம்லா மாவட்டத்தில் சிக்கியுள்ளனர்.
அதில் 150 பேர் சிமிகோட் எனும் பகுதியிலும், 50 பேர் ஹில்சா எனும் பகுதியிலும் சிக்கியுள்ளனர். இதையடுத்து, விமானம் மூலம் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வானிலை மோசமாக உள்ளதால் ஹில்சா மற்றும் சிமிகோட்டில் உள்ள யாத்ரீகர்களை லக்னோவில் இருந்து 4 மணி நேர பயண தூரத்தில் உள்ள நேபாள்கஞ் பகுதிக்கு விமானத்தில் கொண்டு செல்வது சிரமம் என்பதால், வானிலை சரியான பிறகு அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அது வரை அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேபாளத்துக் கான இந்திய தூதரகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலையால் 200 இந்திய பக்தர்கள் சிமிகோட்டில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைலாச யாத்திரை சென்ற 1500 பேர் இதே சிமிகோட் பகுதியில் சிக்கினர். அவர்களை இந்திய தூதரகம் பாதுகாப்பாக மீட்டது குறிப்பிடத்தக்கது.