தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக இருந்து வருகிறார். 57 வயதான கமலா ஹாரிஸுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கமலா ஹாரிஸுக்கு நடத்தப்பட்ட ரேபிட் பரிசோதனையிலும் பி.சி.ஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த நோய் அறிகுறியும் இல்லை என்றும் கமலா ஹாரிஸ் தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வீட்டில் இருந்தே பணியாற்றுவார். கொரோனா தொற்றில் இருந்து குணமானவுடன் அவர் மீண்டும் இயல்பாக பணிக்கு திரும்புவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், மாடர்னா கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை அவர் பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு செலுத்திக்கொண்டார். இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 2021 இல் பதவியேற்ற நாளுக்குப் பிறகு எடுத்துக்கொண்டார். மேலும், அவர் 2021 ஆம் ஆடு அக்டோபர் மாத இறுதியில் ஒரு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 1 ஆம் தேதி கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார்.
முழுமையாக தடுப்பூசியும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட நபர்கள் தீவிர கொரோனா தொற்றில் இருந்தும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தில் இருந்தும் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது கொரோனா கட்டுப்பாடு நெறிமுறயாக உள்ளது. இதனால், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனோ அல்லது அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உட்னோ நெருக்கிய தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"