'யுவான் வாங் 5' என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலாகும். இந்த கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி எடுத்து செல்வதற்கான அனுமதியை ஜூலை 12 அன்று இலங்கை அரசு வழங்கியது. அதாவது கோத்தபய அரசு இதற்கான அனுமதியை வழங்கியது.
ஆனால் சீன கப்பலின் வருகைக்கு இந்தியா கவலை தெரித்தது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என தொடர்ந்து இலங்கையிடம் இதுகுறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு தகவல் ஒன்றை அனுப்பியது. அதில், யுவான் வாங் 5 கப்பல் இலங்கை வருகை தொடர்பாக மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரியுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்து வருகிறது. 4 பில்லியன் டாலர் நிதி மற்றும் பொருள் உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இந்நிலையில் சீன கப்பலின் வருகை இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசு சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இலங்கை அரசு சீன கப்பலை, ஆய்வு கப்பல் என உத்தரவாதம் அளித்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது.
இந்த கப்பலின் திட்டமிடப்பட்ட வருகை குறித்து இந்தியா தீவிர ஆலோசனை மேற்கொண்டு இலங்கையிடம் கவலை தெரிவித்தது.
யுவான் வாங் 5 கப்பல்
யுவான் வாங் 5 என்பது செயற்கைக்கோள்கள், ஏவுகணைகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் உதவும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும். யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை வருகை தென்னிந்தியாவில் உள்ள பல துறைமுகங்கள் மற்றும் பிற முக்கிய வசதிகளை கண்காணிக்க கூடும். அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோத்தபய அரசு அனுமதி
இந்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, கடந்த அரசாங்கத்தால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டைக்கு சீன கப்பல் வருவதற்கான அனுமதி ஜூலை 12 அன்று வழங்கப்பட்டது. அப்போது, இலங்கை அரசு முற்றிலும் சீர்குலைந்திருந்தது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தலைமறைவாகி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த கப்பல் வருகையை ஒத்திவைப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.