உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறவும்: அதிபர் ஜோ பைடன்
போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எந்த நேரம் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. உலகின் மிகப் பெரிய ராணுவத்தை (ரஷியா) நாம் இப்போது எதிர்த்து வருகிறோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, உக்ரைனில் சுற்றுலா சென்றிருக்கும் அமெரிக்கர்களும், அங்கு பணி நிமித்தமாக இருக்கும் அமெரிக்கர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடுங்கள்” என்றார்.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் நடப்பாண்டு இறுதிக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.
எச்ஐவி வைரஸை கண்டறிந்தவர் மறைவு
மனித இனத்துக்கு மிகப் பெரிய சவால் அளித்துவரும் எச்ஐவி வைரஸை மற்றொரு ஆராய்ச்சியாளருடன் இணைந்து கண்டுபிடித்த பிரான்சை சேர்ந்த லுக் மொன்டாக்னியர் காலமானார். அவருக்கு வயது 89.
பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் எச்ஐவி தொற்றை மற்றொரு ஆராய்ச்சியாளருடன் இணைந்து கண்டறிந்ததற்காக இவர் 2008-ஆம் ஆண்டு அந்த ஆராய்ச்சியாளருடன் இணைந்து நோபல் பரிசை இவர் பகிர்ந்து கொண்டார்.
பாரீசின் புறநகர்ப் பகுதியான நியூல்லி சர் செய்ன் பகுதியில் வசித்து வந்த லுக், வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளை சவால் செய்யும் மேவரிக் சோதனைகளில் தனியாக ஈடுபட்டவர் ஆவார்.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தற்காப்பு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
1983ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி முதல் எச்ஐவி வைரஸ் கண்டறிவதற்கான பணிகளை இவர் தொடங்கினார்.
அமெரிக்காவில் ஒரேநாளில் புதிதாக
1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..!
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 1.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அமெரிக்காவை அதிகம் பாதித்தது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 40.60 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 58.07 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.89 கோடியை கடந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,89,71,166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 2,137 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 9 லட்சத்து 39 ஆயிரத்து 095 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா தடுப்பூசி போட மறுத்ததால் அமெரிக்க கடற்படை வீரர்கள் 240 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
லிபியா பிரதமரை கொல்ல முயற்சி
வட ஆப்பிரிக்க நாடானலிபியாவின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி விட்டனர்.
இந்த கொலை முயற்சியில் அவர் அதிருஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸி.யில் இன்று குவாட் உச்சி மாநாடு
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார்.
செயலாளர் பிளிங்கன் பிப்ரவரி 7-13 வரை ஆஸ்திரேலியா, பிஜி & ஹவாய் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார், அதே சமயம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவாட் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மெல்போர்னில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “